வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (19/03/2018)

கடைசி தொடர்பு:19:37 (19/03/2018)

`குடிதண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள்' - கலெக்டரிடம் பெண்கள் குமுறல்

குடிதண்ணீர்- பெண்கள் குமுறல்

ஆதிதிராவிடர் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில், கடந்த ஆறு மாதங்களாக குடிதண்ணீர் இன்றி அவதிப்பட்டுவருவதாக,100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சாக்கோட்டை அருகிலுள்ள மணச்சை கிராமத்தில், 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். இதில், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கே வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு, வேறு சமூகத்தினர் குடி தண்ணீர் தர மறுப்பதாகக் குற்றம் சாட்டிவருகிறார்கள். இதுகுறித்து மணச்சை கிராமத்தைச் சேர்ந்த லதாவிடம் பேசியபோது, “கடந்த ஆறு மாதங்களாகவே, தண்ணீர் ஒரு மணி நேரம் வந்தால், ஒரு குடம் நிறைவதற்கு 15 நிமிடம் ஆகிறது. எங்க ஊர்ல மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இரண்டு இருக்கிறது. இன்னொன்றும் புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். இது போக, எங்க பகுதியில் சின்டெக்ஸ் வைத்திருக்கிறார்கள். இது எதுவுமே எங்களுக்குப் பயன்படவில்லை. எங்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை இருப்பதை பஞ்சாயத்து கிளார்க்கிடம் சொன்னால், வேறு சமூகத்தினர் இருக்கும் பகுதியில் வந்து தண்ணீர் பிடித்துக்கொள்ளச் சொல்லுகிறார். அங்கே போனால், தொட்டால் தீட்டு என்பது மாதிரி பேசி சண்டை இழுப்பார்கள். இதற்காவே நாங்கள் அந்தப் பகுதிக்குப் போவதில்லை.

சாதி மோதல்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, வேலன்குடி கிராமத்துக்குச் சென்று குடிதண்ணீர் எடுத்துவருகிறோம். இதுதொடர்பாக நாங்கள் சாக்கோட்டை ஊரக வளர்ச்சித் திட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தோம். அவர் வந்து பார்க்கும்போது, ஒரு நாள் தண்ணீர் விடுவார்கள். அதுக்குப் பிறகு தண்ணீர் வராது. எங்களுக்கு சரியான முறையில் குடிதண்ணீர் தர வேண்டும் என்பதற்காக சாலைமறியலில் ஈடுபட்டோம். காவல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சொன்னாலும், ஊரில் உள்ளவர்கள் எங்களுக்கு சரியான தண்ணீர் கொடுக்க மறுத்துவருகிறார்கள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பம்பு ஆபரேட்டர் இறந்துபோனார். அவருக்குப் பதிலாக, எங்கள் ஊர்க்காரர்களை பம்பு ஆபரேட்டராகப் போட்டபோது, எங்களுக்குக் குடிதண்ணீர் நன்றாக வந்தது. அவரையும் சாதி, தீட்டு என்று பேசி, ஊர் மக்கள் வேலைக்கு வரவிடலை. இந்தக் கொடுமைகளைச் சரிபண்ண வேண்டும். குடிதண்ணீர் எங்கள் பகுதிக்கு பிரச்னை இல்லாமல் வர வேண்டும்'' என்றார் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க