தாயைக் காப்பாற்ற முயன்ற மகள்கள்! வீட்டுக்குள் 3 உயிர்கள் பறிபோன சோகம்

உயிர்கள்

ஈரோட்டில், பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்துகிடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சித்தோடை அடுத்த வடக்கு தயிர்பாளையத்தைச் சேர்ந்தவர், ராஜா (48). விவசாயியான இவர், நேற்று இரவு தன்னுடைய தோட்டத்துக்குச் சென்றுவிட்டு, இன்று காலை 6 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை), உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த அசதியில் மனைவி மற்றும் குழந்தைகள் இன்னும் எழுந்திருக்கவில்லை போல என நினைத்து, கதவைத் திறக்கச்சொல்லி தட்டியிருக்கிறார். பலமுறை கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தச் சத்தமும் வராமல் இருந்திருக்கிறது. இதையடுத்து ராஜா, அவருடைய மனைவி மற்றும் மகள்களுடைய எண்ணுக்கு போன் செய்திருக்கிறார். ரிங் தொடர்ந்து அடித்ததே தவிர யாரும் எடுக்கவில்லை. இதனால் பயந்துபோனவர், வீட்டின் பின்புறம் உள்ள பெட்ரூம் ஜன்னல் அருகே சென்றிருக்கிறார். அப்போது, பெட்ரூம் பகுதியிலிருந்து கடுமையான புகை வெளியேறியிருக்கிறது. அதைப் பார்த்து பயந்துபோன ராஜா, அருகிலுள்ள தன்னுடைய உறவினரை அழைத்து, வீட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர்.

அப்போது, பெட்ரூமில் இருந்த மெத்தை எரிந்து புகைந்துகொண்டிருந்திருக்கிறது. வீடு முழுவதும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளைக் கூப்பிட்டுக் கதறியவர், பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்ததும் அதிர்ந்து போயிருக்கிறார். ராஜாவினுடைய மனைவி ஜெயமணி (45), தனுஷியா (19), பவித்ரா (12) ஆகிய மூவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, இறந்து கிடந்திருக்கின்றனர். பின்னர், இச்சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் சொல்ல, இறந்துபோன 3 பேரின் உடல்களைக் கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம்குறித்து விஷயமறிந்தவர்கள் கூறுகையில், “இறந்துபோன 3 பேரில், ஜெயமணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தீ, மெத்தையில் பரவிப் பற்றியிருக்கிறது. அதைப் பார்த்துப் பதறிப்போன ஜெயமணியின் மகள்கள் இருவரும் காப்பாற்ற போராடியிருக்கின்றனர். அதனால், அவர்கள் மீதும் தீக்காயம் ஏற்பட்டிருகிறது. தீயின் சூடு தாங்காமல், மூவரும் பாத்ரூமுக்குச் சென்று தண்ணீரைத் திறந்துவிட்டு தீயை அணைக்க முயற்சி செய்திருக்கின்றனர். அதற்குள், தீயின் புகை வீடு முழுவதும் பரவ, 3 பேரும் மூச்சடைத்து பாத்ரூமிலேயே இறந்து போயிருக்கின்றனர்” என்றனர்.

சிலிண்டர் வெடித்துதான் 3 பேரும் இறந்துபோனார்கள் என தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளைப் பரப்பினார்கள். உண்மையில், வீட்டிலிருந்த சிலிண்டரில் எந்தவித கசிவும் இல்லை. ஆனால், பெட்ரூமில் ஒரு சிலிண்டர் இருந்தது. மேலும், பெட்ரூமில் மண்ணெண்ணெய் கேனும் இருந்தது. ஒருவேளை முதலில் சிலிண்டரைப் பற்றவைத்து தற்கொலை செய்துகொள்ள நினைத்திருக்கலாம். ஆனால், இந்தத் தீ விபத்து, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால்தான் நடந்திருக்கிறது என போலீஸார் தரப்பில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. மேலும், வீட்டின் மெயின் டோர் உள்பக்கமாகப் பூட்டப்பட்டு, அதன் சாவி வீட்டினுள் இருக்கிறது. ஆனால், பெட்ரூம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது. அதன் சாவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது, பெரிய சந்தேகத்தைக் கிளப்புகிறது. இறந்துபோன ஜெயமணி, நேற்று நள்ளிரவு அவருடைய தந்தைக்கு போன் செய்ததாக சொல்லப்படுகிறது. போலீஸார் தீவிர விசாரணைசெய்து வருகின்றனர். மேலும், திருப்பூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வுசெய்ய வந்திருக்கிறார்கள். அதெல்லாம் முடிந்த பிறகுதான் என்ன நடந்ததென்பது தெரியவரும்.
   


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!