சசிகலா புஷ்பா திருமணம் உண்மையா? - உறவினர்கள் சொல்வது என்ன | Rumours on Sasikala pushpa

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (19/03/2018)

கடைசி தொடர்பு:20:30 (19/03/2018)

சசிகலா புஷ்பா திருமணம் உண்மையா? - உறவினர்கள் சொல்வது என்ன

அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கு, வரும் மார்ச் 26-ம் தேதி, டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்ட திருமண அழைப்பிதழ், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ் புக்களில்  வைரலாகப் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சசிகலா புஷ்பா

அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா. இவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மாநகராட்சியில் மேயராகப் பணியாற்றியவர். மேயராகப் பணியில் இருக்கும்போதே ஜெயலலிதாவால் ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். மேயர், ராஜ்யசபா எம்.பி., மகளிரணியில் முக்கிய பொறுப்பு என குறுகிய காலத்தில் அ.தி.மு.க-வில் ஏறுமுகத்தில் இருந்தவர்.  

கடந்த 2015-ம் ஆண்டு, பெரு மழை வெள்ளம் சூழ்ந்து தூத்துக்குடி பாதிக்கப்பட்ட நேரத்தில், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முநாதன் ஆகியோரை ''தத்தி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது” என நண்பர் ஒருவரிடம் சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ லீக் ஆனது. தொடர்ந்து, டெல்லி ஏர்போர்ட்டில் எம்.பி., திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகின. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, ''போயஸ் கார்டனில் வைத்து ஜெயலலிதா என்னை அடித்தார்” என பாராளுமன்றத்தில் பேசி பரபரப்பைக் கிளப்பினார். இதன் காரணமாக, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், அது தொடர்பான எவ்வித அறிக்கையும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்படாததால், தற்போது வரை ராஜ்யசபா எம்.பி-யாகவே தொடர்ந்துவருகிறார்.

கடந்த சில வருடங்களாக கணவர் லிங்கேஷ்வர திலகனுடன்  நிலவிய கருத்து வேறுபாட்டால், டெல்லியில் தனியாக வசித்துவந்தார். இதனால், விவாகரத்து கேட்டு டெல்லி துவாரகா மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பித்தி  ருந்தார். இந்த வழக்கில், கடந்த சனிக்கிழமை விவாகரத்து அளிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலா  புஷ்பாவுக்கும் ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முனைவர் ராமசாமிக்கும் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வரும் மார்ச் 26-ம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதாக திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

இதுகுறித்து சசிகலா புஷ்பாவிடம் கருத்து கேட்பதற்காக அவரைத் தொடர்புகொண்டோம்.  நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.  அவரது உதவியாளர் நிகிலிடம் பேசினோம், “ கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததும், விவகாரத்து பெற்றதும் உண்மைதான். திருமணம்குறித்து எனக்கு எதுவும் தெரியாது.” என சமாளித்தார். சசிகலா  புஷ்பாவின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம், “அவருக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க