வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (19/03/2018)

கடைசி தொடர்பு:21:30 (19/03/2018)

'கட்டடம் பழுது... அவலத்தில் அரசு மருத்துவமனை...' -  இது நாகை சோகம்!

நாகை மாவட்டம் சங்கரன்பந்தல் அரசு மருத்துவமனைக் கட்டடம் பழுதாகிவிட்டது. அதனால், கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள ஒரு சிறிய கட்டடத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளது. 

Government Hospital-1

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சங்கரன்பந்தலில், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை இயங்கிவந்தது. இந்த ஊரைச் சுற்றியுள்ள சுமார் 100 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மருத்துவமனையில்தான் மருத்துவம் பார்த்துவந்தனர். இந்த மருத்துவமனை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதடைந்துவிட்டது.  இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுகாதாரத் துறை பொறியாளர் கூறிவிட்டார். இதனால், அருகில் உள்ள சிறிய கட்டடத்தில் அதாவது, சித்த மருத்துவப் பிரிவில் மருத்துவமனை இயங்கிவருவதால், தினந்தோறும் வருகைதரும் சுமார் 1000 நோயாளிகளுக்குரிய மருத்துவச் சேவையை செய்யமுடியவில்லை.  

அரசு மருத்துவமனை

இதுபற்றி சமூக ஆர்வலர் அழகிரிசாமியிடம் பேசினோம், "இந்த மருத்துவமனைக்குரிய இடத்தை 1948-ல் இஸ்லாமிய பிரமுகர் முகமது இப்ராஹிம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.  ஆனால், அதை அரசு வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசுடமையாக்கவில்லை.  அதனால், தற்போது இந்த இடம் முஸ்லிம் வக்பு போர்டுக்குச் சொந்தமானது, இதில் மருத்துவமனை கட்டக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.  இதனால், இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முடியாமல் அரசு நிர்வாகம் தவிக்கிறது.  ஒரு புதிய இடத்தை விலைக்கு வாங்கி, அதில் மருத்துவமனை கட்ட வேண்டும்" என்றார்.  

 இந்த மருத்துவமனை மருத்துவர் செந்தில் வேலனிடம் பேசியபோது, "புதிய கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளோம். நன்கொடையாக வழங்கிய இந்த மருத்துவமனை இடத்தை அரசுடமையாக்குவதற்கு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுள்ளார்கள்.  விரைவில் நல்ல முடிவு ஏற்பட்டு, புதிய மருத்துவமனை அமையும் என நம்புகிறேன்" என முடித்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க