'மாநில அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு' - அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!

அரசுப் பள்ளி 

 தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் 'அறிவியல் ஒளி' மாத இதழ் இணைந்து நடத்திய மாநில அளவிலான அறிவியல் திறனறித் தேர்வில் கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வுபெற்றுள்ளனர்.

2017-ம் ஆண்டுக்கான ஒன்பதாவது அறிவியல் திறனறிதல் தேர்வு, 05.11.2017 தேதியன்று சென்னை ஊரப்பாக்கம், வேலூர், திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சாவூர், தேனி, ஆயக்காரன்புலம், திருச்சி, கரூர், கோயம்புத்தூர், தலவாய்ப்பட்டினம், ராமநாதபுரம், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய 15 ஊர்களில்,16 மையங்களில் 71 பள்ளிகளிலிருந்து 2020 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 373 மாணவர்கள் தேர்வுபெற்றனர். இத்தேர்வு, கரூர் மாவட்ட அளவில் வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  வெள்ளியணைப் பள்ளியைச் சார்ந்த 33 மாணவர்கள் தேர்வு எழுதியதில், அவர்களில் இரண்டு மாணவர்கள் தேர்வுபெற்றனர். திருச்சி, கரூர் மாவட்டங்களில் சிறப்பான முறையில் மதிப்பெண்பெற்று தேர்வுபெற்ற 14 மாணவர்களில் ஒரு மாணவராக வெள்ளியணைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆர்.சுதர்சன் என்ற மாணவரும்,  அடுத்ததாக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுள் ஒருவராக கோ.அஸ்வின் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரும் தேர்வுபெற்று அரசுப் பள்ளிக்கு பெருமைசேர்த்துள்ளனர். 

தேர்வுபெற்ற மாணவர்கள், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்மூலம் திருச்சியில் நடைபெற உள்ள விழாவில் பரிசுகள் பெற உள்ளார்கள். அறிவியல் திறனறித் தேர்வில் தேர்வுபெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் சி.தமிழரசன், தேர்வு முடிவை மாணவர்களுக்கு வழங்கிப் பாராட்டினார். அப்போது, இந்த வெற்றிக்கு உறுதுணைபுரிந்த அறிவியல் திறனறித் தேர்வு ஒருங்கிணைப்பாளர் தனபாலையும் தலைமை ஆசிரியர் பாராட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!