வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (19/03/2018)

கடைசி தொடர்பு:10:24 (20/03/2018)

"தாத்தா எப்போது வருவார் என தொண்டர்கள் ஆவலோடு கேட்கின்றனர்" - மதுரையில் நெகிழ்ந்த உதயநிதி!

தி.மு.க இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, மதுரை வடக்கு - தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்

70 வயதுக்கு மேற்பட்ட 1306 தி.மு.க முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, இன்று மதுரை ஒத்தக்கடையில் உள்ள மைதானம் ஒன்றில் விழா நடைபெற்றது. மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான மூர்த்தி தலைமையில் நடை பெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார். 70 வயது முதல் 102 வயது நிறைவடைந்த  1306 மூத்த உறுப்பினர்களுக்கு (ரூ.5001)ப்  பொற்கிழி வழங்கி கௌரவித்தனர். 

இவ்விழாவில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த லெட்சுமி 71 வயதுடைய மூதாட்டி கூறுகையில்,  "எனக்கு விவரம் தெரிந்தது முதல், எனக்கு தி.மு.க தான் பிடிக்கும். நான் வாக்குரிமை பெற்றதில் இருந்து தி.மு.க-வுக்கு மட்டும்தான் வாக்கு அளித்துள்ளேன். எனது நான்கு மகன்களும் தி.மு.க-வின் உண்மை விசுவாசிகள். மதுரையில் எங்கு தி.மு.க விழா நடந்தாலும் சென்றுவிடுவார்கள். தி.மு.க மகளிர் அணியில் கடை நிலைத் தொண்டராகப் பல பணிகளைச் செய்துள்ளேன். அதைத் ஞாபகப்படுத்தி, தற்போது எங்களுக்கு மரியாதை செய்கிறது தி.மு.க. துடிப்பான இளைஞர் உதயநிதி ஸ்டாலின் கையில் இந்த பொற்கிழியைப் பெற்றது மிகவும் பெருமை அளிக்கிறது" என்றார்.

கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவில் இப்படி ஒரு விழா நடந்ததே இல்லை. தி.மு.க தான் கழக முன்னோடிகளுக்கு மரியாதை செய்கிறது, பொற்கிழி வழங்குகிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல இந்த பொற்கிழி வழங்கும் விழா பெயர் சொல்ல வேண்டும். இந்த விழாவை தமிழகம் முழுவதும் நடத்த  வேண்டும் என்று விருப்புகிறேன். தி.மு.க-வின் தொண்டனாக தளபதி அவர்களிடமும் தலைவரிடமும் இது தொடர்பாக பேச உள்ளேன். இவர்களை நேரடியாகச் சந்திப்பது எனக்கு சந்தோசத்தை அளிக்கிறது. 'தாத்தா எப்போது வருவார்' என்று என்னிடம் தொண்டர்கள் ஆவலோடு கேட்கின்றனர். ஜல்லிக்கட்டை டி.வி-யில் மட்டும்தான் பார்த்திருக்கேன். அந்த ஆசை, சில மாதங்களுக்கு முன் சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் நிறைவேறியது. அதற்குக் காரணம், மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தி தான். தற்போது என்னைப் பார்த்து பலரும் எரிச்சல் அடைகின்றனர். நான் தி.மு.க-வுக்கு வந்தது பொறுப்பு பெறுவதற்குத்தான் என்று கூறுகின்றனர். நான் பிறந்ததிலிருந்து தி.மு.க தொண்டன். பெரியார், அண்ணாவைப் பார்த்ததில்லை. இங்கி ருக்கும் மூத்த கழக முன்னோடிகளை அவர்களின் உருவமாகப் பார்க்கிறேன்" என்றார்.