வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/03/2018)

கடைசி தொடர்பு:08:47 (20/03/2018)

செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துபோகுமா? #WorldsparrowDay2018

செல்போன் டவர் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துபோய்விட்டதாகத் தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது. செல்போன் டவருக்கும் சிட்டுக்குருவி இனம் அழிந்துபோவதற்கும் சம்பந்தமில்லை என்கிறார், வனம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் மணிவண்ணன்.

dr.manivannan

அவரிடம் பேசும்போது, "15 வருடங்களுக்கு முன், நமது வீடுகளில் நம்மோடு வாழ்ந்த உயிரினம், இன்று நம்மோடு இல்லை. ஏன் இல்லை? அழிந்தால் நமக்கென்ன என்று உங்கள் மனங்களில் தோன்றும் கேள்விக்கான பதில் இதோ...

 சிட்டுக்குருவி- (House Sparrow) என்பது தனி இனம், House Sparrow - என்பதின் பொருள், வீட்டுக்குருவி என்பதே ஆகும். நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள்,  அது நம் வீடுகளில் கூடுகட்டி வாழ்ந்ததை, நாம் உணவு உண்ணும்போது சோற்றுப் பருக்கைகளை எடுத்துச் செல்லும் அழகை, காலையில் நம்மை சத்தமிட்டு எழுப்பும் அழகை. இன்று அதுவெல்லாம் வரலாறாகிப்போனது. 

சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு செல்போன் அலைவீச்சு காரணமா என்றால்,  இல்லை. நான் அதிகமான அளவில் சிட்டுக்குருவிகளைப் பார்த்தது, பெங்களூரு விமான நிலையத்தில். விமான நிலையத்தில் இல்லாத கதிர்வீச்சா? கார்டன் சிட்டி (Garden City ) பெங்களூரில் உள்ள மரங்கள், குருவிகள் கூடுகட்டி வாழ ஏற்றதாக உள்ளன. ஆனால், இன்று நமது நகரங்களில் மரங்கள் இல்லை, கான்கிரீட் வீடுகளில் ஜன்னல்கள் திறப்பதில்லை, எனவே கூடுகட்ட முடியவில்லை. உணவுப் பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில் வருவதால் சிதறுவதில்லை. தானியங்களை வெயிலில் காயவைப்பதில்லை. எனவே, சிட்டுக்குருவிகளுக்கு உணவும் கிடைப்பதில்லை.        

சிட்டுக்குருவி                                                        

நகரங்களில் எழும் அதிக சத்தம், இந்த சின்ன உயிரினத்திற்கு ஏற்றதாய் இல்லை. எனவே, கிராமங்களை நோக்கி, காடுகளை நோக்கி இவை இடம் பெயர்ந்து வாழ்கின்றன. இதன் இடப்பெயர்வு, மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கை அறிவிப்பு. நகரங்கள், மனிதன் வாழ தகுதியற்ற இடங்களாக மாறிவருகின்றன என்பதன் அறிகுறிதான் இது.      

கோயம்புத்தூரில் என் நண்பர் ஒருவர் செல்போன் டவரில் சிட்டுக்குருவிவளர்த்தார். அங்கே, சிட்டுக்குருவி குஞ்சு பொறித்தது. கதிர்வீச்சு தாக்கத்தால் அழிந்துபோகக்கூடிய இனம் என்றால் குஞ்சு பொறித்து வாழ்ந்திருக்குமா?  சிட்டுக்குருவி திரும்பி வருமா? தெரியவில்லை. ஆனால், மற்ற இனப் பறவைகளுக்கு நம் மனிதர்கள் செய்யும் சிறு உதவிகளைப் போல ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே தானியங்களும் தண்ணீரும் வையுங்கள். நிச்சயம் சிட்டுக்குருவி காலப்போக்கில் உங்கள் வீடு தேடி வரும்" என்கிறார் நம்பிக்கையோடு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க