வெளியிடப்பட்ட நேரம்: 03:53 (20/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (20/03/2018)

சசிகலாவின் கணவர் நடராசன் காலமானார்!

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். 

நடராசன்

சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனால், நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.35 மணியளவில் நடராசன் மரணமடைந்தார். இதை, மருத்துவமனை நிர்வாகம் உறுதிசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரது உடல் எம்பாமிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எம்பாமிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்படும் எனத் தெரிகிறது.


நடராசன் வாழ்க்கை...

தஞ்சாவூரைச் சேர்ந்த நடராசன், அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். தி.மு.க மாணவரணியில் இருந்தபோது, கருணாநிதி முன்னிலையில் சசிகலாவை மணந்தார். மக்கள் தொடர்பு அதிகாரி என்பதால், அரசு அதிகாரிகளுடன் நட்பு பாராட்டி வந்தார். அந்த வகையில், கலெக்டர் சந்திரலேகாவுடன் ஏற்பட்ட நட்பால், அவர்மூலம் ஜெயலலிதாவின் அரசியல் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்கும் வேலையைத் தனது மனைவி நடத்திவந்த 'வினோத் வீடியோ' கடைக்கு வாங்கிக் கொடுத்தார். இதன்மூலம் ஏற்பட்ட நட்பால், பின்னாளில் ஜெயலலிதாவுடனே சசிகலாவும், நடராசனும் தங்கினர். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, அ.தி.மு.க ஜெயலலிதாவின் பக்கம் வந்தது. அ.தி.மு.க தொடர்பான அனைத்து வேலைகளையும் நடராசன் கவனித்துவந்தார். ஆனால், நாளைடைவில் ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே, போயஸ்கார்டனை விட்டு வெளியேறினார். எனினும், சசிகலா அவருடன் செல்லவில்லை. போயஸ் கார்டனை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் நடராசன் ஈடுபட்டுவந்தார். 

சொந்த ஊரில்... 

சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக வைத்தபிறகு, அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளதால், தஞ்சாவூரில் உள்ள அவரின் ஆதரவாளர்கள், உறவினர்கள் என அவரது வீட்டில்  கூடத் தொடங்கியுள்ளனர்.

பெசன்ட் நகர் வீட்டில் ஏற்பாடுகள்...

நடராசன் உடலுக்கு எம்பாமிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில், காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதற்காக, பெசன்ட் நகர் வீட்டில் தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. 

பரோலில் வருகிறார் சசிகலா...

நடராசனின் மரணத்தைத் தொடர்ந்து சசிகலா பரோலில் வரவுள்ளார். ஏற்கெனவே, பரோல் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இறப்புச் சான்றிதழ் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது உதவியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க