வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (20/03/2018)

கடைசி தொடர்பு:10:31 (20/03/2018)

`பெண் வேடத்தில் கொள்ளையடிக்கச் சென்ற வாலிபர்கள்' - தி.நகரில் பரபரப்பு!

சென்னை பாண்டிபஜாரில், பெண்களைப்போல உடையணிந்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொள்ளை

சென்னை தி.நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஜி.என்.செட்டி சாலையில் அவரது மனைவியுடன் வசித்துவருகிறார். இவர், நேற்று வீட்டில் இருக்கும்போது, இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பதுபோல கொள்ளையடிக்க வந்துள்ளனர்.  வந்தவர்களில் ஒருவர் பெண் வேடமிட்டது தெரியவரவே, சுதாரித்த ராதாகிருஷ்ணனும் அவரது மனைவியும் கூச்சலிட்டுள்ளனர். அதனால் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் பிடித்து பாண்டிபஜார் போலீஸில் ஒப்படைத்தனர். 

இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்க வந்தவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27) மற்றும் பழனியைச் சேர்ந்த சுஜந்த் (20)  எனத் தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு சுஜந்த், ராதாகிருஷ்ணன் வீட்டில் வேலைபார்த்துள்ளார். வயதானவர்கள் வீட்டில் இருப்பதை நோட்டமிட்ட சுஜந்த், கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பெண் வேடமிட்ட சுஜந்த், வாடகைக்கு வீடு கேட்பதைப்போல பிரகாஷுடன் சென்றுள்ளார். சி.சி.டி.வி கேமரா பதிவிலிருந்தும் தப்பிக்கத்தான் இந்த வேடம் என்று போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான பிரகாஷ், இன்ஜினீயர் என்றும், சுஜந்த் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்துள்ளது.