புதுக்கோட்டையில் இரவோடு இரவாக உடைக்கப்பட்ட பெரியார் சிலை!

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று நள்ளிரவில் பெரியார் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. 

பெரியார் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ளது, விடுதி என்ற கிராமம். இந்த ஊரின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே  பெரியார் முழு உருவச்சிலை பெரிய பீடத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், பெரியார் நூலகமும் இருக்கிறது. முக்கிய சாலைப் பகுதியிலேயே இருப்பதால் உள்ளூரின் பிரதான அடையாளமாக அந்தச் சிலை இருந்துவந்தது. அந்த ஊரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் அரசியல் தலைவர்கள், அந்தச் சிலைக்கு மாலை அணிவது வழக்கமான நடைமுறை. அதேபோல,பொதுத் தேர்தலின் சமயங்களில் ஓட்டுக் கேட்டு வரும் தலைவர்கள், அந்தச் சிலை அருகில்தான் தங்களது வாகனத்தை நிறுத்தி பரப்புரை செய்வது வழக்கம்.

இப்படியான சூழலில்தான், நேற்றிரவு மர்ம நபர்கள், சிலையின் தலையை  உடைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள யாரோ செய்த இந்த வேலை, விடிந்ததும்தான் தெரியவந்திருக்கிறது. தலை துண்டித்த நிலையில் காணப்பட்ட பெரியார் சிலையால், இன்று அதிகாலை முதலே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர்,  உடனடியாக ஆலங்குடி போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். நகரில் உள்ள தி.க கட்சியினரும் தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சியினரும் பெரியார் அபிமானிகளும் தகவல் அறிந்து திரண்டுவிட்டார்கள். அதேபோல விரைந்துவந்த போலீஸாரும் அந்தப் பகுதியில் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களைச் சூழ்ந்துகொண்ட கட்சியினர், சிலையை உடைத்தவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அவர்களைச் சமாதானம்செய்த  போலீஸார், சிலையை உடைத்தவர்களை நிச்சயமாகக் கண்டுபிடித்துக் கைதுசெய்வோம் என்று உறுதி அளித்தனர். இந்தச் சம்பவத்தால் புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பரபரப்பு பரவியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!