ஒரே நாளில் 1,000 பேர் அரசு நூலகத்தில் உறுப்பினராகினர்! ஆச்சர்யப்படவைத்த மாணவர்கள்

அரசுப்பள்ளி மாணவர்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஒரே நாளில்  திருச்செந்தூர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர், நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர். உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார். 

மாணவர்கள்

சமீப காலமாக, பள்ளி மாணவ- மாணவியரிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டேவருகிறது. கம்ப்யூட்டர், செல்போன்கள்  நுழைந்துவிட்ட மாணவர்களின் வாழ்க்கையில், செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களின் வாசிப்புப் பழக்கம் அரிதாகிப் போய்விட்டது.  அரசு பொது நூலகத்துறையின்  மூலமாக பள்ளி மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும், ஏப்ரல் 23-ம் தேதி, ’உலக புத்தக தினத்தை' முன்னிட்டு, அதிக உறுப்பினர்களை இணைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டாரக நூலகத்தில், அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள் 1,000 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்

ஏழை எளிய மாணவர்களை நூலகத்தில் உறுப்பினராக இணைப்பதற்காக, அமெரிக்கா வாழ் தமிழரான விக்னேஷ் மதிவாணன் என்பவர் நிதிஉதவி செய்துள்ளார்.  ஆயிரம்  மாணவ-மாணவிகளுக்கு, தலா 30 ரூபாய் வீதம் 30,000 ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். மாணவர்கள், திருச்செந்துார் மற்றும் தூத்துக்குடி அரசு நுாலகங்களில் உறுப்பினர்களாக இணைந்தனர். இந்த மாணவர்களுக்கான  உறுப்பினர் அடையாள அட்டையை  மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார்.      

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் சிலர் கூறும்போது, “நூலகத்துல கதை, கவிதை, வரலாறு, சமூகம், சமயம், இலக்கியம், அறிவியல், கல்வி ஆகிய பல துறைகள் சார்ந்த புத்தகங்கள் உள்ளன. அத்துடன், தினசரி செய்தித்தாள்களும் வார இதழ்களும் நூலகத்துக்கு வருகின்றன. பள்ளியில் நூலகப் பாட வேளையில் 40 நிமிடத்தில் ஒரு புத்தகத்தைப் படித்துவிட முடியாது. உறுப்பினர் அட்டை இருப்பதால், விருப்பமான புத்தகங்களை  உறுப்பினர் அட்டை மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க உதவியாக இருக்கும். பாட நூலில் படித்தவை தொடர்பான மற்ற பிற செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டிகளில் பங்குபெறவும், ஆசிரியர்கள் தரும் அசைன்மென்ட்டுகளை முடிக்க  குறிப்புகள் எடுக்கவும், நூலகம் உதவியா இருக்கிறது. விடுமுறை நாள்களில், நேரத்தை நூலகத்துக்கு வந்து பயனுள்ள வகையில் செலவிடலாம். எங்களை உறுப்பினர்களாக இணைக்க சந்தா தொகை கட்டிய விக்னேஷ் மதிவாணன் சாருக்கு நன்றி” என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!