வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (20/03/2018)

கடைசி தொடர்பு:11:58 (20/03/2018)

சொந்த வேலைக்குச் செல்பவர்களையும் கைதுசெய்யும் போலீஸ்! ரத யாத்திரையால் நெல்லையில் பதற்றம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகை தரும் ராமராஜ்ஜிய ரதம், கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குள் வந்து சேர்ந்தது. அதற்கு, எல்லைப் பகுதியில் ஆதரவாளர்கள் வரவேற்புக் கொடுத்த நிலையில், எதிர்ப்பாளர்கள்  திரண்டுவருவதால் பதற்றம் நீடிக்கிறது. 

ராமராஜ்ய ரதம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அயோத்தி முதல் 6 மாநிலங்களின் வழியாக ராமராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட அந்த ரதம், புனலூர் வழியாக தமிழக எல்லையான செங்கோட்டை வந்து சேர்ந்தது. செங்கோட்டைப் பகுதியில், கோட்டை கருப்பசாமி கோயிலின் முன்பாக இந்து அமைப்புகள் வரவேற்பு அளித்தனர். 

இதனிடையே, இந்த ரதத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். செங்கோட்டையில் எதிர்ப்புக் குழுவினரின் கூட்டம் அதிகமாகத் திரளும் சூழ்நிலை ஏற்பட்டதால்,  நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று (19-ம் தேதி) மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, 23-ம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்துக்குள் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக வருகை தந்த திருமாவளவன், ஜவாஹிருல்லா, கோவை ராமகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். கடையநல்லூர் பகுதியில், இஸ்லாமிய மக்கள் சொந்த வேலையாகச் சென்றால்கூட, கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ரத யாத்திரை

இதனிடையே, வாஞ்சிநாதன் சிலை அமைந்திருக்கும் பகுதியில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் திரண்டு நின்றதால், பதற்றமான சூழ்நிலை நிலவியது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த எதிர்ப்பாளர்களை போலீஸார் அப்புறப்படுத்திவருகிறார்கள். இந்த ரத யாத்திரை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

செங்கோட்டை எல்லையில் உள்ள வாஞ்சிநாதன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க