144 தடை உத்தரவு ரத யாத்திரைக்குப் பொருந்தாது! - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்

கடும் எதிர்ப்புகளை மீறி, நெல்லை, செங்கோட்டை வழியாக ரதயாத்திரை இன்று தமிழகத்திற்குள் நுழைந்தது. 

ரதயாத்திரை

ரதயாத்திரைக்கு எதிரான போராட்டத்திற்கு, 144 தடை உத்தரவுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். ''கேரளா, மகாராஷ்டிரா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இந்த ரதயாத்திரை சென்றுவந்துள்ளது. அங்கு சென்றபோதெல்லாம் ஏன் இந்த ரதயாத்திரையை அனுமதித்தனர் என்ற கேள்வி கேட்கவில்லை. அவர்கள், அவர்கள் வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் எனச் சொல்வது ஏற்புடையதாக இல்லை'' என்றார். 

மேலும், இந்த ரதயாத்திரைக்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக் கூடாது என்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள். அவ்வாறு இருக்கையில், இந்த ரதயாத்திரையும் வரக் கூடாதுதானே என்ற கேள்விக்கு, 'இது பெரியாரது மண், புரட்சித் தலைவர்களின் மண், ஜெயலலிதாவின் மண். அதனால், குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுவதுபோல, ஒரு ரதம் வருவதால் யாரும் மாறப்போவது இல்லை. மக்களுக்குத் தெரியும், யாரை ஆதரிக்க வேண்டும் யாரை நிராகரிக்க வேண்டும் என்று'.

ஜெயக்குமார்

'இந்த ரதயாத்திரையைக் காரணம் காட்டி, தேவையில்லாமல் அரசியல் செய்ய வேண்டாம். அமைதியாக இருக்கும் மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் ஆதாயம் அடையும் நிகழ்ச்சிதான் நடக்கிறது. இதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது' என்றார். 

'குறிப்பிட்ட குழு,  யாத்திரைக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி, சட்ட ஒழுங்கைக் கெடுக்கும் முயற்சியைத் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள், ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்குச் சென்று, அவர்களின் சொந்தஊருக்குப் போய்விடுவார்கள். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!