பெண் கஞ்சா வியாபாரியின் பேரனைத் தீர்த்துக்கட்ட 'ஸ்கெட்ச்'! - சிறையில் நடந்த சதித்திட்டம் | Murder plan against grandson of Marijuana merchant

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (20/03/2018)

கடைசி தொடர்பு:13:09 (20/03/2018)

பெண் கஞ்சா வியாபாரியின் பேரனைத் தீர்த்துக்கட்ட 'ஸ்கெட்ச்'! - சிறையில் நடந்த சதித்திட்டம்

 ரவுடிகள்

சென்னையில், பிரபல கஞ்சா வியாபாரியான கிருஷ்ணவேணியின் பேரன் கண்ணனைக் கொலைசெய்ய, ரவுடிகள் நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்ததும், அதிரடியாகக் களமிறங்கிய போலீஸ் டீம், 5 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.

 சென்னையில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு, தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைக் கைதுசெய்யும் படலம் துரிதமாக நடந்துவருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இந்தச் சமயத்தில், சென்னையில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரியான கிருஷ்ணவேணியின் பேரன் கண்ணன் என்பவரைக் கொலைசெய்ய, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் டீம் திட்டமிட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும், உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ், கார்த்திக் ஆகியோர்கொண்ட தனிப்படை டீம் அதிரடியாகக் களமிறங்கியது. 

 சென்னை ஷெனாய் நகர், மெட்ரோ ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தீனா என்ற தினேஷ்குமார், கண்ணன், மதன்குமார் என்ற ஒல்லி மதன் ஆகிய மூன்று பேரை துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். அடுத்து, கண்ணனைக் கொலைசெய்ய திட்டமிட்டு, சென்னை நியூ ஆவடி சாலையில் பதுங்கியிருந்த இளங்கோவன், ராமகிருஷ்ணன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் நிலைய ரவுடிகள் சரித்திரப் பதிவேட்டில், ஏ பிளஸ் ரவுடி பிரிவில் உள்ள தட்சணாமூர்த்தியின் கூட்டாளிதான் தீனா. இவர்மீது கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோல, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளிதான் ராமகிருஷ்ணன். இவர்மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் பேரன் கண்ணனிடம் ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் மாமூல் கேட்டுள்ளனர். அதில், இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், கண்ணனுக்கு ஆதரவாக தட்சணாமூர்த்தியின் கூட்டாளிகள் களமிறங்கியுள்ளனர். ஏற்கெனவே, தட்சணாமூர்த்தியின் கூட்டாளிகளுக்கும் ராதாகிருஷ்ணன் கூட்டாளிகளுக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. 

 தற்போது, தட்சணாமூர்த்தியும் ராதாகிருஷ்ணனும் சிறையில் உள்ளனர். சிறையில் இருந்தபடியே அவர்கள் கண்ணனை போட்டுத்தள்ள 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கண்ணனைத் தீர்த்துக்கட்ட, ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகளான ராமகிருஷ்ணனும் இளங்கோவும் வந்துள்ளனர். எதிர்த்தாக்குதல் நடத்த, கண்ணனுக்கு ஆதரவாக தட்சணாமூர்த்தியின் கூட்டாளிகளான தீனாவும் ஒல்லி மதனும் தயாராக இருந்துள்ளனர்.

இந்தத் தகவல், நுண்ணறிவு போலீஸ் மூலம் எங்களுக்கு நள்ளிரவில் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கி, இரு தரப்பினரையும் கைதுசெய்துள்ளோம். கடந்த 17.1.2018ல்தான் தட்சணாமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். இளங்கோவன் என்பவர், ரவுடிகளுக்கு தகவல் சொல்லும் உளவாளியாகச் செயல்பட்டுவருகிறார். இதனால், அவரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் ரவுடிகளின் கூட்டாளிகளைத் தேடிவருகிறோம்" என்றனர். 

கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் மகன் சேகர், கடந்த 2014-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். அடுத்து, கண்ணனுக்கு ஸ்கெட்ச் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் துரித நடவடிக்கையால், ரவுடிகளின் மோதல் தடுக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.  
 


டிரெண்டிங் @ விகடன்