`யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு!’ - ரத யாத்திரை விவகாரத்தில் புகார் கூறும் கமல் | Ram Rajya Rath Yatra -  Kamal slams Tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (20/03/2018)

கடைசி தொடர்பு:13:59 (20/03/2018)

`யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு!’ - ரத யாத்திரை விவகாரத்தில் புகார் கூறும் கமல்

சமூக நல்லிணக்கத்துக்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் குற்றம்சாட்டியிருக்கிறார். 

கமல்


விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழக எல்லையை வந்தடைந்தது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. 

தமிழகம் வந்த ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ரத யாத்திரையால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் அதற்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முன்பிலிருந்தே வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகளுக்கு இடையே ரதயாத்திரை இன்று தமிழகம் வந்தடைந்தது. இதை எதிர்த்து இன்று சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்புக் கொண்டு வந்தது. தி.மு.க உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவை வெளியே ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ரத யாத்திரை விவகாரத்தில் நடிகர் கமல் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். `சமூக நல்லிணக்கத்துக்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்துக்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு’ என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க