'சசிகலா வராங்க; இது மேலிட உத்தரவு'- பரபரக்கும் தஞ்சாவூர் | Sasikala to attend Natarajan final rituals at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (20/03/2018)

கடைசி தொடர்பு:19:12 (21/03/2018)

'சசிகலா வராங்க; இது மேலிட உத்தரவு'- பரபரக்கும் தஞ்சாவூர்

சசிகலா

சசிகலாவின் கணவர் நடராசன், நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக, சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிலமணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், தஞ்சாவூர் பரிசுத்தம் நகர் முதல் தெருவில் உள்ள நடராஜனுக்குச் சொந்தமான இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்படுகிறது.

நடராசன் இறுதி சடங்கு
 

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் இருந்து  பரோலில் வரும் சசிகலா, சாலை மார்க்கமாக கார் மூலம் தஞ்சாவூருக்கு வந்து,  நடராஜன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார். நாளை 11 மணிக்கு மேல்  நடராஜனின்  உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக நடராஜனின் சொந்த ஊரான விளார் செல்லும் சாலையில் உள்ள முள்ளிவாய்க்காலுக்கு எதிராக ஒரு இடமும், ஊருக்குள் உள்ள நடராஜன் குடும்பத்துக்குச் சொந்தமான இடம் ஒன்றும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சசிகலா வந்து எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ, அந்த இடத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.


பரோலில் சசிகலா வருவதால், நடராஜனின் உடல் வைக்கப்பட்டுள்ள பரிசுத்தம் நகர் பகுதி மற்றும் விளார் கிராமம் முழுவதிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர ஆய்வுசெய்து, பாதுகாப்புகுறித்து பெங்களூரு சிறைக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் இருபுறமும் உள்ள செடிகளை வெட்டி சுத்தம்செய்தனர். ஆங்காங்கே உள்ள குண்டும் குழியுமான சாலையை சீரமைத்தனர். எதற்காக என விசாரித்தோம், சசிகலா வராங்க அதற்காக சுத்தம் செய்யச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்றார்கள்.

நடராசன் இறுதி சடங்கு
 

அறுவடைசெய்யப்பட்ட வேர்க்கடலைகளைச் சாலையில் காயவைத்திருந்தனர் விவசாயிகள். போலீஸார், உடனே அவற்றை அள்ள வேண்டும் என அதட்ட, விவசாயிகள் பதறியபடி அள்ளினர். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் துக்கம் விசாரிக்க வந்துசெல்கிறார்கள். சசிகலாவின் வருகைக்காக பரபரப்புடன் காத்திருக்கிறார்கள் அவரது உறவினர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க