வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (20/03/2018)

கடைசி தொடர்பு:17:40 (20/03/2018)

கூடங்குளம் அணுஉலை முறைகேடு: சி.பி.ஐ விசாரணைக்கு தி.மு.க வலியுறுத்தல்!

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதால் அது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணு உலை

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோது உள்ளூர் மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அணு வளாகத்தில் உள்ளூரைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால்,நிலம் கொடுத்தவர்களில் ஒரு சதவிகிதம் பேருக்குக்கூட பணி வழங்கப்படவில்லை, அதனால் உள்ளூர் இளைஞர்களுக்குப் பணி வழங்க வலியுறுத்தி தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவருமான அப்பாவு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து மனு அளித்தார் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள்ளுர் மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. 

அணு உலை நிர்வாகத்தில் உயர் பதவிகளில் இருக்கும் சில அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். ஆனால், உள்ளூர் மக்கள் நிலத்தை அணு உலை நிர்வாகத்துக்காகக் கொடுத்துவிட்டு விவசாயத்தையும் இழந்துவிட்டு சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். அணுமின் நிலையத்துக்காக நிலம் கொடுத்தவர்களில் ஒரு சதவிகிதம் பேருக்குக்கூட இதுவரை பணி வழங்கவில்லை என்பது வேதனைக்குரியது.

அப்பாவு

கூடங்குளம் அணுமின் நிலைய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட 5 ஆயிரம் வீடுகளுக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை, மேலும் அணுமின் நிலையத்தின் அதிகாரிகள் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர், அதைச் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும், அணு உலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக அரசு வாபஸ் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ம்தேதி அணுமின் நிலையம் முன்பு தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது’’ என்றார்.