அனைத்துக்கட்சியினர் எச்சரிக்கை எதிரொலி! - சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது பெரியார் சிலை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலை தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டது. மிக விரைவில் அங்கு புதிய வெண்கலச் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படவும்  முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெரியார் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை விடுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து காலையிலேயே பதற்றம் பரவியது. சற்று நேரத்துக்கெல்லாம் தி.க, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தகவல் அறிந்துத் திரண்டுவிட்டார்கள். பதற்றமான சூழல் நிலவுவதை அறிந்து உடனடியாக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. அவர்களைச் சூழ்ந்துகொண்ட அனைத்துக்கட்சித் தரப்பினரும், "இன்று மாலைக்குள் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரித்தனர்.

இதை வலியுறுத்தி பேரணி ஒன்றையும் அனைத்துக்கட்சியினரும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். அவர்களிடம் பேசிய போலீஸார், சிலையை உடைத்தவர்களை நிச்சயமாகக் கண்டுபிடித்து கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். இதன்பிறகு, அருகில் இருந்த சிலையின் தலை தற்காலிகமாகப் பொருத்தப்பட்டது. அதற்கு திமுக, தி.க உள்ளிட்ட உள்ளூர் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தற்போது அமைந்திருப்பது சிமென்ட் சிலை என்பதால், அதற்குப் பதிலாக வெண்கலச்சிலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளைக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் அதற்கென குழு அமைக்கவும் தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள சிலைக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புப் போட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசியல் கட்சிகள் முன்வைத்தன. இதை, மாவட்ட எஸ்.பி ஏற்றுக்கொண்டு சிலையைப் பாதுகாக்க உத்தரவிட்டிருக்கிறார். அதிகாலையிலிருந்தே பதற்றம் பரவி இருந்த நிலையில், சிலையில் தலை மீண்டும் பொருத்தப்பட்ட பிறகு பதற்றம் கொஞ்சம் தணிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!