வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (20/03/2018)

`உங்கள் உடையை மகனுக்குக் கொடுத்து ராணுவத்துக்கு அனுப்புவேன்' - கணவரின் இறுதிச்சடங்கில் மனைவி சபதம்

ராணுவத்தில் பணியின்போது உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரான அரியலூரில் தகனம் செய்யப்பட்டது. கணவரின் உடல்மீது அவரின் மனைவி சபதம் எடுத்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்டத்திலிருந்து எந்த ஓர் அதிகாரியும் கலந்துகொள்ளாததுதான் வேதனையளிக்கிறது என்று குமுறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஜே.சி.ஓ அதிகாரியாகப் பணியாற்றிவந்துள்ளார். இவருக்கு பொற்செல்வி என்ற மனைவியும் கிருஷ்ணபிரியா, கிருஷ்ணகாந்த் என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் கடந்த 17-ம் தேதி இரவு 8.30 மணியளவில், மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டம், தேவ்லாலி ரோட்டில் இயங்கிவரும் ராணுவ முகாமில் தனது பட்டாளியன் வீரர்களுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிரமாக மரக்கிளை ஒன்று கிருஷ்ணமூர்த்தி தலையின்மீது விழுந்து படுகாயமடைந்தார். வலிதாங்க முடியாமல் சத்தம்போடவே அருகில் உள்ள வீரர்கள் ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னரே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் 17-ம் தேதி இரவு கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

                                 

இவரது உடல் நேற்று காலை 7 மணியளவில், மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கார் மூலம் மதியம் 2.20 மணியளவில் அவரது சொந்த ஊரான ராங்கியம் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு. அரசு மரியாதையுடன், தேசியக் கொடி போர்த்தப்பட்டு, 7 குண்டுகள் வீதம் 3 சுற்றுகளாக 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தியின் மரணம் ராங்கியம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

                                

இறந்த ராணுவ வீராரின் மனைவி பொற்செல்வி கணவரின் உடலைக் கண்டு கதறி அழுதது நெஞ்சை உருக வைத்தது. அப்போது ராணுவ வீரர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்காகக் குழுமியபோது தன் கணவனின் கன்னத்தில் முத்தமிட்ட பொற்செல்வி, `அத்தான் அமைதியாக உறங்குங்கள். உங்கள் மகனையும் ஒரு ராணுவ வீரனாக ஆக்குவேன். உங்களது உடையை மகனுக்குக் கொடுத்து ராணுவத்துக்கு அனுப்புவேன்' எனக் கணவரின் உடல்மீது சபதம் எடுத்துக்கொண்ட சம்பவம் ராணுவ அதிகாரிகளை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் மெய்சிலிரிக்க வைத்தது.

                            


''ராணுவத்தில் ஒரு வீரர் இறக்கிறார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல வெளியூர், வெளிமாநிலத்திலிருந்து பல அதிகாரிகள் வந்திருந்தார்கள். ஆனால், மாவட்டத்திலிருந்து ஆட்சியரோ அல்லது ஆர்.டி.ஒ,  டி.ஆர்.ஒ என எந்த அதிகாரியும் கலந்துகொள்ளாதது மனவேதனை அளிக்கிறது'' எனக் குமுறுகிறார்கள் பொது மக்கள்.