லட்சத்தை தாண்டியது ஜிப்மர் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு விண்ணப்பம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடக்கவிருக்கும் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்வதற்காக 12 நாளில் 1 லட்சத்து 25 விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.

புதுச்சேரி

புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வருகின்றது மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி. காரைக்காலில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கிளையில் 50 எம்.பி.பி.எஸ் இடங்களும், புதுச்சேரி ஜிப்மரில் 150 இடங்களும் என மொத்தம் 200 இடங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி 2018-2019 கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்வுக்கு www.jipmer.edu என்ற இணையதள முகவரியில் மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஜிப்மர்

இந்தத் தேர்வுக்குத் தற்போது +2 தேர்வெழுதிக்கொண்டிருக்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளான 7-ம் தேதி 4.30 மணி வரை 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய நிலவரப்படி 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2017-2018 இந்த நுழைவுத் தேர்வுக்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தற்போது 12 நாள்களிலேயே 1.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் 26 நாள்கள் இருக்கும் நிலையில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!