"என்னைப் பார்த்து ஏன் எரிச்சல்?!'' - உதயநிதி ஸ்டாலின் கோபமும் மதுரை 'கூட்ட' சர்ச்சையும்

உதயநிதி ஸ்டாலின்

``நான் தற்போது தி.மு.க-வுக்கு வந்திருப்பது கட்சியில் பொறுப்பு வகிக்கத்தான் என்று நினைத்து பலரும் என்மீது எரிச்சலடைகின்றனர்'' என்றார் உதயநிதி ஸ்டாலின். 

மதுரை ஒத்தக்கடையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட 70 வயது முதல் 102 வயது வரை உள்ள 1,306 தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழியுடன் தலா 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், வேட்டி - சேலையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் 78 பெண்கள் பொற்கிழி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா மூலம் உதயநிதி ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை முழுமையாகத் தொடங்கிவிட்டார் என்றே சொல்லலாம். 

பொற்கிழியை முதல் நபராக வந்து பெற்ற 102 வயதுடைய பெரியவர் வாழவந்தான் இதுகுறித்து கூறுகையில், ``நான் அண்ணா காலத்தில் கொடுத்த கழக உறுப்பினர் அடையாள அட்டைகளை இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். தற்போது எனக்கு இந்தப் பொற்கிழியைக் கட்சி வழங்கியதற்கு நன்றி. மதுரை, ஸ்ரீரங்கம் என எனது கட்சிப் பணி நீண்டது. கடைசிவரை ஒரு தொண்டனாகவே இருக்கிறேன்'' என்றார்.

மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மூதாட்டி லெட்சுமி, ``எனக்கு விவரம் தெரிந்தது முதல்  தி.மு.க-வை மட்டுமே  பிடிக்கும். எனது நான்கு மகன்களும் தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள். மதுரையில் எங்கு தி.மு.க சார்பாக விழா நடந்தாலும் அங்கு சென்றுவிடுவார்கள். தி.மு.க மகளிர் அணியில் கடைநிலை தொண்டராகப் பல பணிகளைச் செய்துள்ளேன். அதனை, தற்போது ஞாபகப்படுத்தி எங்களுக்கு மரியாதை செய்கிறது தி.மு.க. துடிப்பான இளைஞர் உதயநிதி ஸ்டாலின் கையில் இந்தப் பொற்கிழியைப் பெற்றது மிகவும் பெருமையளிக்கிறது'' என்றார்.

உதயநிதி ஸ்டாலின்

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், `` `தலைவர் கலைஞர் எப்போது மீண்டும் நலமுடன் வந்து நம்மையெல்லாம் சந்திப்பார்' என்று என்னிடம், இங்கிருக்கும் கழக முன்னோடிகள் பலரும் கேட்டனர். அதற்கு நான் அவர்களிடம், `விரைவில் நலமுடன் வந்து உங்களை எல்லாம் சந்தித்துப் பேசுவார்' என்று தெரிவித்தேன். எனக்கு உங்களையெல்லாம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் இந்தப் பொற்கிழி வழங்கும் விழாவும் பெயர் சொல்ல வேண்டும். இந்த விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். இதுதொடர்பாக தி.மு.க-வின் தொண்டனாக தளபதி அவர்களிடமும் தலைவர் கலைஞரிடமும் பேச உள்ளேன். இப்படிச் செய்தால் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ததுபோல் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை நான் ஜல்லிக்கட்டை டி.வி-யில் மட்டும்தான் பார்த்திருக்கேன். இப்போது நேரிலேயே பார்த்துவிட்டேன். அந்த ஆசை, சில மாதங்களுக்கு முன்பு சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில்  நிறைவேறியது. அதற்குக் காரணம், மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ மூர்த்திதான். நான் தற்போது தி.மு.க-வுக்கு வந்திருப்பது கட்சியில் பொறுப்பு வகிக்கத்தான் என்று நினைத்து பலரும் என்மீது எரிச்சலடைகின்றனர். ஆனால், நான் பிறந்ததிலிருந்து தி.மு.க தொண்டன். உங்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதைவிட எனக்கு வேறு மிகப்பெரிய பொறுப்புகள் எதுவும் சந்தோசத்தை அளிக்காது. பெரியார், அண்ணா போன்றவர்களை நான் பார்த்ததில்லை. ஆனால், உங்களைப் போன்ற தீவிர தொண்டர்கள்  மூலமாக அவர்களைப் பார்க்கிறேன்'' என்றார் உற்சாகத்துடன். 

உதயநிதி

இந்த விழாவில் பொற்கிழி பெற்றவர்கள் பலரும் தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகளாக இருந்தனர். குறிப்பாக, 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு எதற்காகப் பொற்கிழி வழங்கப்படுகிறது என்றுகூடத் தெரியாமல் இருந்தனர். விழாவில், சிலருடைய வயது, பெயர் உள்ளிட்ட பிரச்னைகளால் குழப்பமிருந்தது. ஆனாலும், அதையெல்லாம் சமாளித்து விழா சிறப்பாக முடித்துவைக்கப்பட்டது. விழாவில், உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் வெற்றிபெற அவருக்கு மீனாட்சியம்மன் சிலை வழங்கப்பட்டது.

உதயநிதி

இந்நிலையில், 'உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் ஆளேயில்லை. தொண்டர்களின் கூட்டமும் குறைவு' என்பதுபோன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. சில புகைப்படங்களும் உலா வந்தன. ஆனால், இதை மறுத்துள்ள தி.மு.க 'உடன்பிறப்புகள்' குவிந்திருக்கும் கூட்டத்திற்கு உதயநிதி வணக்கம் சொல்வது போன்ற புகைப்படங்களையும், ஆயிரக்கணக்கில் தி.மு.க தொண்டர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் போட்டியாக பதிவிட்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!