``தேசிய சாம்பியன் ஆகிட்டதால கார்த்திக்கை புறக்கணிக்கிறீங்களா?!’’ - அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரரின் பெற்றோர் கேள்வி

``எங்க பையன், தேசிய அளவிலான தடகளப் போட்டிகள்ல ரெண்டு தங்கப்பதக்கமும், ரெண்டு வெள்ளிப்பதக்கமும் வாங்கியிருக்கான். உலக அளவுல எட்டாவது இடம் வந்தான்.

<

தடகள வீரர் கார்த்திக்

 

அவனுக்கு, பிறவியிலேயே காதும் கேட்காது; வாயும் பேச வராது. அவனுக்கு இந்த அரசாங்கம் எந்த உதவியும் பண்ணலை. தேசிய அளவுல சாதிச்ச வீரர்களுக்குத் தலா அஞ்சு லட்சம் ரூபா குடுத்துச்சு தமிழக அரசு. ஆனா, `அதுல இவன் வர மாட்டான்'னு சொல்லி, இவனுக்கு மட்டும் உதவி பண்ணவேயில்லை!" என்று வெம்பி வெடிக்கிறார்கள் கார்த்திக் என்கிற தடகள வீரரின் பெற்றோர். ஆனால், இந்தத் தகவலை விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுபோனபோது, `டெஃப்க்கு தனியாக ஒலிம்பிக் இருக்கிறதா?' என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள புஞ்சை தோட்டகுறிச்சியைச் சேர்ந்தவர் தடகள வீரர் கார்த்திக். இவரின் தந்தை சரவணன், கூலிக்கு மாட்டுவண்டி ஓட்டுகிறார். தாய் விஜயா, கீற்று மொடையும் தொழில் செய்கிறார். கார்த்திக்குக்கு, சந்தியா என்கிற காது கேளாத சகோதரியும் உள்ளார்.

 

குடும்பத்தில் வறுமை தாண்டவமாட, கார்த்திக்கோ உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம் என எல்லாப் போட்டிகளிலும் மாநில, தேசிய அளவில் சாதித்து, குடும்பத்துக்குள் மகிழ்ச்சியை ஊட்டியிருக்கிறார்.

தேசிய அளவில் உயரம் தாண்டுதல், 110 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போன்ற போட்டிகளில் தலா ஒரு தங்கம் வாங்கியுள்ளார். சர்வதேச காது கேளாதோர் டெஃப் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில், எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். தகுந்த பயிற்சி, சத்தான சாப்பாடு, வசதிகள், ஊக்கம் இவை எதுவுமே இல்லாமல் இந்த அளவுக்குச் சாதித்திருக்கிறார் கார்த்திக். ஆனால், `அரசு தரும் ஐந்து லட்சம் ரூபாய் உதவிக்கான தகுதியில் கார்த்திக் வர மாட்டார்' என்று தமிழக அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இது பற்றி, கார்த்திக்கின் தந்தை சரவணனிடம் பேசினோம்...

``என் பையன், புகழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில போன வருஷம்தான் இறுதி வகுப்பு படிச்சு முடிச்சான். இவனுக்குள்ள இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது எங்களுக்குத் தெரியாது. அந்தப் பள்ளிக்கூடத்துல இவன் ஒன்பதாவது படிச்சப்ப, உடற்கல்வி ஆசிரியையா இருந்த மகேஸ்வரிதான், என் பையனுக்கு உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம்னு விளையாட்டுல திறமை இருக்கிறதைக் கண்டுபிடிச்சு, ஊக்கப்படுத்தினாங்க. ஆரம்பத்துல பொதுப்பிரிவுகள்ல, நல்லா இருக்கும் மாணவர்களோடுதான் மோதினான். மாவட்ட அளவில் உயரம் தாண்டுதலில் அஞ்சு தங்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வாங்கினான். தொடர்ச்சியா மாவட்ட அளவுல போல் வால்டில் மூணு தங்கம், மண்டல அளவுல ஒரு வெள்ளி, ரெண்டு வெண்கலப்பதக்கமும் வாங்கினான்.

 

போன வருஷ ஆரம்பத்துலதான் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கே போனான். 100, 200 மீட்டர் போட்டிகள்ல வெள்ளி, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல்ல தலா ஒரு வெள்ளி, குண்டு எறிதல், கபடி போட்டிகள்ல தங்கம்னு எல்லா விளையாட்டுலயும் ஜெயிச்சான். போன வருஷம் பிப்ரவரி மாநில காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள்  பாளையங்கோட்டையில நடந்சுச்சு. அதுல கலந்துகிட்டு உயரம் தாண்டுதல், போல் வால்ட், 110 தடை ஓட்டம்னு, தலா ஒரு தங்கம் வாங்கினான். 400 மீட்டர் ரிலே ஓட்டத்துல வெண்கலம் வாங்கினான். அதே சூட்ல, போன வருஷம் மார்ச் 26-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்துல நடந்த 21-வது தேசிய காது கேளாதோர் தடகளப் போட்டியில் கலந்துக்கிட்டான். அங்கதான் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் ஜெயிச்சான். அதேபோல,110 தடை தாண்டு ஓட்டத்துலயும் 18.2 விநாடியில் வந்து தங்கம் ஜெயிச்சான். 

ஆனா, அவனுக்கு எந்த வசதியையும் எங்களால் பண்ணிக்கொடுக்க முடியல. கிழிஞ்ச ஷூவைத்தான் போட்டிருந்தான். சத்தான உணவு தர முடியல. அதனால, போன வருஷம் டிசம்பர் மாசம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த 22-வது தேசிய காது கேளாதோர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல், 110 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டிகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம்தான் அவனால வாங்க முடிஞ்சது. இதுக்குக் காரணம் சரியான பயிற்சி இல்லாததுதான்.

மாற்றுத் திறனாளி

போன ஜூலையில் துருக்கியில் நடந்த காது கேளாதோர் சர்வதேச ஒலிம்பிக் (டெஃப்) போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி எட்டாவது இடம் வந்ததா அறிவிச்சாங்க. ஆனா, அவன் நாலாவது இடம் வந்தான். அங்க மூணாவது இடம் வந்த வீரர் தாண்டியது 1.89 மீட்டர் உயரம்தான். இவன் தேசிய அளவிலேயே 1.90 மீட்டர் தாண்டியிருக்கிறான். தகுந்த பயிற்சி இருந்தா, இவன் மூணாவது இடம் வந்திருப்பான். 

தகுந்த பயிற்சி, சாப்பாடு, உபகரணங்கள் கிடைச்சிருந்தா, உலக அளவில் தங்கமே ஜெயிச்சிருப்பான். இங்க இருக்கிற காகிதப்புரத்தில் உள்ள அரசு காகித ஆலையில் உள்ள நடராஜ் என்பவர்தான் இவன்மேல இரக்கப்பட்டு கோச்சிங் கொடுத்தார். துருக்கி போட்டிக்குப் போறதுக்காக குஜராத் காந்தி நகர்ல உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சி குடுத்துச்சு. நிரந்தரமா இவனுக்குப் பயிற்சியாளர் வெச்சுக்கிற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. அப்படி, நிரந்தர கோச்சிங் வெச்சு பயிற்சி குடுத்தா, சர்வதேச அளவுல தொடர்ச்சியா தங்கம் வெல்வான்" என்றார்.

 அடுத்து பேசிய அவரின் மனைவி விஜயா,

``ஜெயலலிதா அம்மா முதலமைச்சரா இருந்தப்ப, `தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்'னு அறிவிச்சாங்க. இப்போதைய முதலமைச்சர் அதுக்காக இந்த வருஷம் 1.95 கோடி ரூபாய் ஒதுக்கி, வீரர்களுக்குக் கொடுத்தார். என் மகனுக்கும் உதவி கேட்டு, முதலமைச்சர், துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர்னு பலருக்கும் இவனை பற்றிய தகவல்களை அனுப்பினோம். ஆனால், `பொதுப்பிரிவுக்கு மட்டும்தான் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அந்தத் தகுதியில் கார்த்திக் வரலையே'னு கைவிரிச்சுட்டாங்க.

நாங்க எங்க குடும்பத்துக்காக உதவுங்கன்னு கேட்கலை. உலக அளவுல தங்கம் வாங்கி நம்ம நாட்டுக்குப் பெருமை சேர்க்கிற அளவுக்கு கார்த்திக் இருந்தும், அவனுக்கு கோச்சிங் கொடுக்க ஆள் நியமிக்க, அவனை மேம்படுத்த ஆகுற செலவையாவது அரசாங்கம் ஏத்துக்கும்னுதான் கேட்கிறோம். இவனால தமிழ்நாட்டுக்குத்தான் பெருமை" என்று தழுதழுத்தார். 

கார்த்திக்

இதைப்பற்றி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டியிடம் பேசினோம். நாம் சொன்ன தகவல்களைக் கேட்டுக்கொண்டவர், ``பாரா ஒலிம்பிக்கா, டெஃப்பா?" என்று கேட்டார். நாம் அதற்கு, ``கார்த்திக் எட்டாவது இடம் வந்தது டெஃப் ஒலிம்பிக்கில்தான்" என்றதும், ``டெஃப்புக்கு ஒலிம்பிக் இருக்கிறதா?" என்று கேட்டு அதிரவைத்தார்.

அதேநேரம், ``எனது மெயில் ஐ.டி-க்கு கார்த்திக் பற்றிய பயோடேட்டாவை அனுப்பிவையுங்க. தகுதியிருந்தால், உதவி பண்ண ஆவன செய்கிறேன்" என்றதோடு, அவரது மெயில் ஐ.டி-யையும் நமக்கு அனுப்பிவைத்தார். நாமும் கார்த்திக் பற்றிய தகவல்களை அமைச்சருக்கு இமெயில் செய்திருக்கிறோம். 

கார்த்திக் போன்று பல திறமையாளர்கள் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து, சரியான பயிற்சிகளை அரசு கொடுத்தால் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டுக்குப் பல பெருமைகள் சேரும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!