ரத யாத்திரைக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கைது! | All the way back to the city of the city

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (20/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (20/03/2018)

ரத யாத்திரைக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கைது!

கைது

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவிலிருந்து நெல்லை மாவட்டம், செங்கோட்டை வழியாக தமிழகத்துக்கு விஷ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்துள்ளது. இந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. சம்பவ இடத்திற்கே சென்று எதிர்ப்பு தெரிவிக்க இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  விருதுநகரில் கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் சீமான் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதையடுத்து இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. ஆட்சியா? இல்லை பா.ஜ.க. ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், சேலம் ஐந்து ரோடு, குகைப் பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே தி.மு.க.வினரும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இப்படி சேலம் மாநகரிலும், சேலம் மாநகருக்கும் வெளியேயும் நிறைய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.