வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (20/03/2018)

கடைசி தொடர்பு:21:20 (20/03/2018)

`நெல்லை கலெக்டர்மீது நடவடிக்கை எடுங்கள்' - முதல்வருக்கு கனிமொழி வலியுறுத்தல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மத உணர்வுடன் ஒரு மதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். அவர்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். 

கனிமொழி

விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகத்துக்குள் வந்துள்ளது. இந்த ரத யாத்திரையைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எதிர்ப்பையும் மீறி தமிழகத்துக்குள் யாத்திரை நுழைந்தால் தடுக்கப் போவதாகவும் அறிவித்தனர். 

அதைத் தொடர்ந்து, ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தி.மு.க-வின் மாநில மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், ``கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரதயாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே. 

அமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை. ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவில், ரதயாத்திரைக்கு ஒரு சிறு குந்தகம் ஏற்பட்டாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும், அப்படி ரத யாத்திரையில் சிக்கலை உருவாக்க சிலர் திட்டமிட்டுள்ளதால், 144 தடைச் சட்டம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து, மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் சங் பரிவார அமைப்பினருக்கு ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரபட்சமற்று செயல்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி, மத உணர்வோடு, ஒரு மதத்துக்கு ஆதரவாகவும் கலவரத்தைத் தூண்டுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடத்தை விதிகளை மீறி, செயல்பட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிமீது தமிழக அரசு உடனடியாக அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.