வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (20/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (20/03/2018)

ரத யாத்திரை எதிரொலி: குமரியில் முக்கிய 10 பேரைக் கைது செய்தது போலீஸ்

திமுக போராட்டம்

ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழ்நாட்டில் வருவதற்கு தி.மு.க உள்ளிட்ட அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குமரியில் முன்னெச்சரிக்கையாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர்கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாக இன்று (20.3.2018)  ராஜபாளையம் வந்தது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

இந்த ரத யாத்திரை வரும் 22-ம் தேதி வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறது. ஆரல்வாய்மொழியில் மாலை 3 மணிக்கு  வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. ராம ராஜ்ய யாத்திரை தமிழகத்தில் நுழையக் கூடாது என தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றன. ரத யாத்திரைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் வி.சி.க மாநில நிர்வாகி பகலவன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மணிமாறன் உட்பட 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வேப்பமூடு ஜங்ஷனில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.