வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (20/03/2018)

கடைசி தொடர்பு:23:20 (20/03/2018)

`ஆர்டர்லி' வேலையில் 5 ஆயிரம் போலீஸார்..! ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அரசுப் பணம் வீண் !

                                   போலீஸ்

போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், 'ஆர்டர்லி' யாக மட்டுமே 5 ஆயிரம் போலீஸார் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆண்டு தோறும் இவர்கள் மூலமாகவே, அரசின் ஊதியப்பணம், 100 கோடி ரூபாய்,  'ஆர்டர்லி' வேலையில் விரையமாகி வருகிறது. கான்ஸ்டபிள், கிரேட் ஒன் கான்ஸ்டபிள், ஹெட்-கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.ஐ, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, கூடுதல் எஸ்.பி, எஸ்.பி., டி.ஐ.ஜி, ஐ.ஜி,  ஏ.டி.ஜி.பி, டி.ஜி.பி. என்று 13 நிலைகளில் காவல் பதவிகள் உள்ளன. ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர், இந்த 13 நிலை காவல் பணிகளில் உள்ளனர். இதில், 5 ஆயிரம் போலீஸார், காவல் உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளின் ஆர்டர்லியாக இருக்கின்றனர் என்பதுதான் இப்போது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதிகாரிகளின் 'சொல்படி' , ஆர்டர்லியாக கடமையாற்றும் 5 ஆயிரம் காவலர்களின் மாத ஊதியம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்றாலும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காக்கிகள், "விடுப்புநாள் இல்லை, 8 மணி நேரப்பணியும் இல்லை, அவசரத்துக்கு விடுமுறை இல்லை. 'ஆர்டர்லி' வேலையில், இந்தச் சிக்கல் இல்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்படி யார் வீட்டில் நாங்கள் வேலை பார்த்தாலும், ஒருநாள் டியூட்டி பார்த்தால், ஒரு நாள் ஓய்வு கிடைக்கிறது. காவல் பணியில் எப்போதுமே இப்படி ஓய்வு கிடைக்காது. எடுபிடி வேலை செய்வதைத்தான் இங்கே கௌரவமாக ஆர்டர்லி வேலை என்று சொல்கிறார்கள். அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுவது, உதவியாளராய் கூடவே இருப்பது மட்டும்தான் 'ஆர்டர்லி' வேலை என்றால், சந்தோஷம்தான். துணி துவைப்பது, துணிகளை அயர்ன் செய்வது, மார்க்கெட்டுக்குச் செல்வது, அதிகாரிகளின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துப் போய் வருவது போன்ற வேலைகளே இதில் பிரதானம். ஒருநாள் விட்டு ஒருநாள் பணி என்பதால் எங்களில் பலர், ஆர்டர்லி வேலையை விரும்பியே செய்கிறோம். இந்தியாவில் கேரளா, டெல்லி, பீகார், ஓடிசா உள்பட 8 மாநிலங்களில் காவலர் சங்கம் உள்ளது. தமிழகத்தில் இல்லை. சங்கம் வந்தால், இந்தப் பிரச்னைகளிலிருந்து தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றனர்.