கருணாநிதி எடுத்துக் கொடுத்த தாலி.. தி.மு.க பாசம்... ம.நடராசனின் ஃப்ளாஷ்பேக்!

நடராசன்

ரசியல் மீது சிறுவயதிலேயே பார்வையைப் பதித்தார் நடராசன். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் பியூசி படிக்கப் போனபோது அது துளிர்விட ஆரம்பித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ கற்கப் போனபோது ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தில் குதிக்கும் அளவுக்குப் போனது.

நடராசனுக்குப் படிப்பில் வெகு ஆர்வம். கிட்டத்தட்ட முதல் ரேங்கை எட்டிப் பிடித்து விடுவார். பாடத்தில் என்ன சந்தேகம் வந்தாலும் அதற்கான விளக்கத்தை ஆசிரியர்களிடம் நடராசன் நேரடியாகக் கேட்க மாட்டார். அவருக்காக, பக்கத்தில் இருக்கிற மாணவர்கள்தான் கேட்பார்கள். சக மாணவர்களை விட்டு சந்தேகங்களைக், கேட்கச் சொல்லித் தெளிவு பெறுவதுதான் நடராசன் ஸ்டைல். நடராசனின் இந்த அணுகுமுறைதான் கடைசி வரையில் தொடர்ந்தது. அடிதடிக்கு ஒருவர், ஆர்ப்பரிக்க ஒருவர், ஆங்கிலத்தில் பேச ஒருவர், அழகாக எழுத ஒருவர் எனக் கல்லூரியில் நடராசனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். காலேஜையே கலக்கிக்கொண்டிருப்பார் நடராசன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தி.மு.க அனுதாபியாக மாறியிருந்தார். அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன், எஸ்.டி.சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்.) இருவரையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார். எல்.கணேசனிடம் காட்டிய நெருக்கம், நடராசனுக்கு அரசுப் பதவியைத் தேடிக்கொடுத்தது. கருணாநிதி முதன்முறையாக முதல்வரான நேரத்தில்தான் செய்தித் துறையில் மக்கள்தொடர்பு பதவி, நடராசன்நடராசனுக்குக் கிடைத்தது.

தொடக்கக் கல்வியை முடித்ததும் விளாரில் இருந்து தஞ்சாவூரில் இருக்கும் ‘தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி’க்கு நடந்து போய் படித்துக்கொண்டிருந்தார் நடராசன். ‘உடல் நிலை பாதிக்கக் கூடாது. இடையூறும் இல்லாமல் படிப்பை மகன் தொடர வேண்டும்’ என்பதற்காகத் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தார் நடராசனின் தந்தை மருதப்பா. ஆங்கிலம் தவிர, மற்ற பாடங்களில் முதல் மாணவனாக மதிப்பெண்களைக் குவித்தார் நடராசன்.

சிறு வயதில் நடராசன், கொஞ்சம் ஒல்லியாக சிவப்பு நிறத்தில் இருந்தார். ஒருநாள் வகுப்பாசிரியர், நடராசனைப் பாராட்டுகின்ற முறையில் முதுகைத் தட்டிக்கொடுத்து தடவிப் பார்த்தார். தன்னை ஊக்கப்படுத்த ஆசிரியர் இப்படிச் செய்கிறார் என நடராசன் நினைத்தார். ஆனால், அடுத்து வந்த தேர்வில் நடராசனின் மதிப்பெண்கள் குறைந்து போயின. பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை திலகர் திடலில், ஒரு கூட்டத்தில் பெரியார் பேசியதைக் கேட்டபோதுதான், அந்த ஆசிரியர் முதுகை ஏன் தடவிப்பார்த்தார் என்கிற அர்த்தம் நடராசனுக்குப் புரிந்தது. இந்தச் சம்பவத்தை நடராசனே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நடராசன்தான், பிராமணரான ஜெயலலிதாவைச் சுற்றி வந்து காரியங்கள் சாதித்துக்கொண்டார். மனைவி சசிகலாவை ஜெயலலிதா பக்கத்திலேயே கொண்டுபோய் நிறுத்தினார்.

‘தியாகச் செயல்களாலும் தீப்பொறி பேச்சுகளாலும் தமிழ்ப்பற்று கொண்ட இளைஞர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் கலைஞர்.’’ - கருணாநிதியைப் பற்றி நடராசன் சொன்ன வார்த்தைகள் இவை.

நடராசன் சசிகலா திருமணம்

பள்ளி மாணவராக இருந்தபோது, கருணாநிதியின் எழுத்திலும் பேச்சிலும் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் நடராசன். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் பங்கேற்றார். மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அந்தப் போராட்டத்தில், அண்ணா தலைமையிலான தி.மு.க-வும் பங்கெடுத்தது. மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.எஸ்ஸி பட்டத்தை வாங்கி வெளியே வந்த நடராசனுக்கு, அரசியல் ஆசை எட்டிப் பார்த்தது. கல்லூரிக் காலத்தில் கட்சி சார்பற்ற முறையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்ட நடராசன், பட்டதாரி ஆனபிறகு மொழிப் போரைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த தி.மு.க-வில் இணைய முடிவெடுத்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன்தான்.

தி.மு.க உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் தஞ்சையின் தளகர்த்தர்களில் மன்னை நாராயணசாமி முக்கியமானவர். இவர் தலைமையில்தான் நடராசனின் திருமணம் 1973 அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்றது. சசிகலாவின் கழுத்தில் நடராசன் கட்டிய தாலியை எடுத்துக் கொடுத்தவர் கருணாநிதி. அந்தத் தாலியை அப்போது சுமந்த சசிகலாதான், தமிழக அரசியலில் பிறகு கோலோச்சுவார் என கருணாநிதி கிஞ்சித்தும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!