சவுதி அரேபியாவில் இறந்த மகனின் உடலை மீட்க கண்ணீருடன் போராடும் தாய்..! | Mother gives the petition to district collector for recovering his deceased son's body

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (21/03/2018)

கடைசி தொடர்பு:01:30 (21/03/2018)

சவுதி அரேபியாவில் இறந்த மகனின் உடலை மீட்க கண்ணீருடன் போராடும் தாய்..!

திருவாரூர் மாவட்டம் கண்டிரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இறந்துபோன இவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர முடியாமல், அவரது தாய் துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

அன்புச்செல்வன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா சென்றிருக்கிறார். அங்குள்ள அல்கோதாரி என்ற நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி அன்புச்செல்வன் மாராடைப்பால் மரணமடைந்துவிட்டதாக, திருவாரூர் கண்டிரமாணிக்கத்தில் வசித்து வரும் இவரது தாய் சாந்தாவுக்கு தகவல் வந்துள்ளது. அன்புசெல்வன் உடலை சொந்த ஊர் கொண்டு வர வழி தெரியாமல் பெரும் மனப்போராட்டத்தில் தவித்த சாந்தா இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். ஆனால் எந்த பலனும் இல்லை. பல நாள்களாக துயரத்துடன் காத்திருந்த சாந்தாவும் உறவினர்களும் இரண்டாவது முறையாக மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து மகனின் உடலுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.