ரத யாத்திரைக்கு எதிராக திருச்சியில் அடுத்தடுத்து சாலை மறியல்..!

ரத யாத்திரைக்கு எதிராக திருச்சியில் அடுத்தடுத்து சாலை மறியல் நடந்ததால் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது

சாலைமறியல்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக ரதயாத்திரையை ஒன்று வருகிறது. இது ராஜபாளையம் வழியாக, ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை சென்று, இறுதியாக, ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது.

இந்த ரதயாத்திரையால், தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் குற்றஞ்சாட்டி, இதற்கு அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்திற்குள் வி.ஹெச்.பி ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும்,செங்கோட்டையில் ரத யாத்திரையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்களை விடுதலைச் செய்ய கோரியும் திருச்சி பாலகரை மற்றும் டி.வி.எஸ் டோல்கேட் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் நடந்த சாலை மறியலில் எஸ்.டி.பி.யை கட்சியைச் சேர்ந்த சுமார் நூறு பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போல பாலகரையில் த.மு.மு.க சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நூறுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் இரண்டு இடங்களிலும் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இன்று மதியம் விஸ்வஹிந்து பரிஷத் நடத்தும் ரத யாத்திரைக்கு எதிராகத் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் பேசியதுடன், தலைமைச் செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, தி.மு.க மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில், ஶ்ரீரங்கம் ஆனந்த், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட தி.மு.க வினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின் மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் திருச்சி லால்குடி,தொட்டியம் முசிறி ஆகிய பகுதிகளில் அப்பகுதி ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!