வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (21/03/2018)

கடைசி தொடர்பு:07:40 (21/03/2018)

"எங்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்" - கொந்தளிப்பில் குமரி மீனவர் சங்கம்!

மீனவர் கூட்டுறவு அலுவலகம்

கூட்டுறவு சங்க தேர்தலில் மீனவர் கூட்டுறவு சங்கத்தினருக்கு மட்டும் ஸ்கூல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுளளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் சிக்கன நாணய சங்கங்கள் 40, நான்கு தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கம், நான்கு கூட்டுறவு கடன் சங்கம்,  ஐந்து நிலவள வங்கி, 12 கூட்டுறவு பண்டக சாலை, மூன்று விற்பனையாளர் கூட்டுறவு சங்கம், ஒரு கூட்டுறவு நகர வங்கி, ஒரு  கூட்டுறவு ஒன்றியம், ஒரு கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றுக்கு உறுப்பினர் தேர்தல் நடக்கிறது. அதுபோல மத்திய கூட்டுறவு வங்கிக்கு 21 உறுப்பினர்கள், 54 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு 11 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், 28 மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கும் தேர்தல் நடக்கிறது.  கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி, 7-ம் தேதி, 16-ம் தேதி மற்றும் 23-ம் தேதி என நான்கு கட்டங்களாக நடக்கின்றன.  அனைத்து சங்கங்களுக்கும் வேட்பு மனு தாக்கல் அந்தந்த சங்க அலுவலகங்களில் வைத்து நடக்கிறது. ஆனால் மீனவர் கூட்டுறவு சங்கங்ககுக்கு மட்டும் வேட்பு மனு தாக்கல் சங்கங்களின் அருகாமையில் உள்ள பள்ளி கட்டடங்களில் வைத்து நடக்கிறது. இதற்கு மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தற்போதைய தலைவர் சகாயம் தலைமையில் சிலர் மீன் துறை உதவி இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து சகாயம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வரும் 26-ம் தேதி நடக்கிறது. பால்வளம், கைத்தறி உள்ளிட்ட இதரவகை சங்கங்களுக்கு அந்தந்த அங்க அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. ஆனால் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டும் கல்வி நிலையங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய சொல்கிறார்கள். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்றார்.