வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (21/03/2018)

கடைசி தொடர்பு:05:30 (21/03/2018)

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு - திருப்பூரில் 600 பேர் கைது!

கைது

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பல இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் கலந்துகொண்ட 600 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, இறுதியாக அயோத்தியை அடையும் வகையில்  திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை வாகனம், நேற்று கேரள - தமிழக எல்லையான செங்கோட்டை பகுதி வழியாக தமிழகத்துக்குள் வந்ததது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ரத யாத்திரைக்கு பல்வேறு பகுதிகளிலும்  பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடைபெற துவங்கின. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெரியார் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் என பலரும் இந்த ரத  யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் அமைப்புகள், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கலந்துகொண்டு ரத யாத்திரைக்கு எதிரான தங்களின் முழக்கங்களை எழுப்பினர். இதனால் திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் மறியலில் ஈடுபட்ட சுமார் 600 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.