வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (21/03/2018)

கடைசி தொடர்பு:10:58 (21/03/2018)

ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகர் உடல் நல்லடக்கம் - நித்யானந்தா உள்ளிட்ட பலர் அஞ்சலி!

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் 11-வது ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகளின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு நித்யானந்தா உள்ளிட்ட பலர் அஞ்சலிசெலுத்தினர்.

ஶ்ரீமத் ஆண்டவன்கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த சீனிவாசச்சாரியார்- குமுதவல்லி தம்பதிக்கு மகனாக, கடந்த 3.6.1935 –ம் ஆண்டு பிறந்தவர் ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள். சிறு வயதிலேயே வேதம், திவ்ய பிரபந்தங்களைக் கற்ற இவர், சென்னை காருமணி சாரிடம்ஸ் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்தார். அடுத்து, ஸ்ரீபெரும்புதூரில் தாகஸாஸ்த்ரம் கற்றார். அதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் படித்தார். தமிழ், தெலுங்கு,  இந்தி எனப் பல மொழிகள் பேசும் ஆற்றல்பெற்றவர். ஸ்ரீபெரும்புதூரில், தமிழ் வித்வான் பட்டம் பெற்று, அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ்ப் பண்டிட்டாக பணிபுரிந்தார். பின்னர், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மட பீடாதிபதியிடம் சரணாகதி அடைந்த, ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள், கடந்த 1989-ம் ஆண்டு, ஸ்ரீமத் ஆண்டவன் மட பொறுப்பை ஏற்றார்.

அடுத்தடுத்த சமயப்பணிகளுக்கு இடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆசிரமத்திலும், ஸ்ரீபாலாஜி மந்திர் ஆலயத்தையும், கடந்த 1996-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியையும் நிறுவினார். அத்துடன் தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்திலும் ஆலயங்கள், திருமண மஹால்களை நிறுவிய இவர், சுமார் 30ஆண்டுகளாக ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பட்டமாக அரும்பணியாற்றினார். இந்நிலையில், ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள், உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காலமானார்.

ஸ்ரீமத் ஆண்டவன்அவரின் உடல், சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்தில், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பிறகு, நேற்று இரவு திருச்சி ஸ்ரீரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள மடத்தில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

நேற்று இரவு முதலே, திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி, நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்கள், அகோபில மடம் ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் வேதாந்தம்ஜி, முன்னாள் துணைவேந்தர் மீனா, முன்னாள் கொறடா மனோகரன், திருச்சியின் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் ஏராளமான பக்தர்கள், ஜீயர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதையடுத்து, இந்து மத சம்பிரதாயப்படி, வேதங்கள் மற்றும் புராணங்கள் பாடப்பட்டு, ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகளின் உடல் கூடையில் உட்கார வைத்தபடி, தலையில் சுமந்த சீடர்கள், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள பெரிய ஆசிரம வளாகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க