காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் முகிலன் - ஆதரவாளர்கள் கவலை! | mugilan to start indefinite hunger strike in prison

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (21/03/2018)

கடைசி தொடர்பு:08:20 (21/03/2018)

காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் முகிலன் - ஆதரவாளர்கள் கவலை!

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் முகிலன், இன்று காலை, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது, அவரது ஆதரவாளர்களைக் கவலையடையவைத்துள்ளது.

முகிலன்

கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ எதிர்ப்பு, நொய்யல் ஆறு பாதுகாப்பு, மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு, தாது மணல் ஆலைகளின் கொள்ளையை அம்பலப்படுத்துதல் எனத் தொடர்ச்சியாக சமூகப் பணிகளுக்காக இயங்கிவந்தவர், முகிலன். கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர்மீது தொடரப்பட்ட வழக்குகளுக்காக, கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். பின்னர், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள்மீது 132 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றைக் கைவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தொடர்ந்து வழக்குகளை நிலுவையில் வைத்திருப்பதால், அப்பாவி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அத்துடன், படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலைமை உள்ளது. அதனால், அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகிலன் தானாகவே நீதிமன்றதில் சரணடைந்தார். 

அதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், கூடங்குளம் அணுஉலை போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தாமிரபரணி ஆற்று நீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறையின் உள்ளேயே  இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஏற்கெனவே, கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவுடன்  இருக்கும் நிலையில் அவர், உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருப்பதால், அவரது வழக்கறிஞர்கள் கவலையடைந்துள்ளனர். உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரி அவரிடம் பேசியும், அதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக வழக்கறிஞர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.