சேலம் சங்கர மடத்தின்மீது மர்ம நபர்கள் கல் வீச்சு!

இந்தியாவில் ராம  ராஜ்ஜியம் அமையவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தியும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பாக உத்தரப்பிரதேசத்திலிருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கி, பல மாநிலங்களுக்கும் சென்று, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைந்து, திருநெல்வேலி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக விருதுநகர், ராஜபாளையத்தை அடைந்து, மதுரை வழியாக வரும் 25-ம் தேதி, ராமேஸ்வரத்தில் நிறைவுசெய்ய இருக்கிறார்கள். இந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு  ஸ்டாலின், வைகோ, திருமா, சீமான், ஜவாஹிருல்லா, வேல்முருகன் எனப் பலரும் கடுமையாக  எதிர்த்தார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முற்போக்கு இயக்கங்கள், ரத யாத்திரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

ராம ராஜ்ஜிய ரதம் செல்லும் இடங்களில் எல்லாம் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. ரத யாத்திரைக்கு எதிராகப் போராடச் சென்ற திருமாவளவன், ஜாவஹிருல்லா, சீமான் மற்றும் சட்டசபையை விட்டு வெளியே வந்து போராடிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள். 

இதற்கிடையே, சேலம் மரவனேரி பகுதியில் அமைந்துள்ள காஞ்சி சங்கரமடத்துக்கு மதியம் வந்த மர்ம நபர்கள், கற்களை வீசி மின் விளக்குகளை உடைத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி காஞ்சி மடத்தில் இருந்த கணேசன் என்பவர் கூறுகையில், ''திடீரென மதியம் ஒரு பைக்கில் கறுப்புக் கொடியோடு சிலர் வந்தாங்க. கற்களை எடுத்து லைட் மீது அடித்து நொறுக்கி விட்டு அருகில் இருந்த பிளெக்ஸ் பேனரை கிழித்து எரிந்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்'' என்றார்.

இந்தச் சம்பவம், சேலம் காவல்துறைக்கு தலைவலி ஏற்படுத்தியுள்ள நிலையில், கல் எறிந்தவர்களை போலீஸார் தேடிவந்தனர். ஆனால் சேலம் நங்கவள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணன், ராஜேந்திரன், மனோஜ் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து, நாங்கள்தான் சங்கர மடத்தின் மீது கற்களை எறிந்தோம் என்றுகூறி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!