"சாப்பாட்டை வீசிட்டு பாறை மேல தாவுனேன்... திரும்பிப் பார்த்தா...!?’’ குரங்கணி தீ அனுபவம் சொல்லும் சஹானா | Kurangani fire survivor sahana shares her horrific experience

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (21/03/2018)

கடைசி தொடர்பு:10:07 (21/03/2018)

"சாப்பாட்டை வீசிட்டு பாறை மேல தாவுனேன்... திரும்பிப் பார்த்தா...!?’’ குரங்கணி தீ அனுபவம் சொல்லும் சஹானா

''எல்லாரும் சந்தோஷமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். திடீர்னு உடம்பெல்லாம் அனலாக ஆரம்பிச்சது. லேசா மூச்சுத்திணறல். என்ன நடக்குதுன்னு யாருக்குமே புரியலை. திடீர்னு எங்க ஆர்கனைசர், 'காட்டுல நெருப்புப் பிடிச்சிருச்சு. எல்லாரும் ஓடுங்க'னு அடிவயித்திலிருந்து ஓங்கி ஒரு சத்தம் எழுப்பினார். எல்லாரும் பாதி சாப்பாட்டில் எழுந்து ஓட ஆரம்பிச்சுட்டாங்க'' என்கிற சஹானாவின் குரலில், குரங்கணி காட்டுத் தீ கொடுத்த பயம் சிறிதும் குறையாமல் இருக்கிறது.

குரங்கணித் தீயின் கொடூர நாக்குகளிலிருந்து தப்பிவந்த கதையை பகிர்ந்துகொண்டார் சஹானா. 

சஹானா

''நான் படிக்கிறது எக்கனாமிக்ஸ். காடு, மலை என இயற்கையோடு ஒட்டி வாழறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இது எனக்கு ரெண்டாவது ட்ரெக்கிங். போன மாசம் நகரிக்குப் போயிருந்தேன். சென்னையிலிருந்து 27 பேர் சனிக்கிழமையே குரங்கணிக்கு ட்ரெக்கிங் போயிட்டோம். மறுநாள்தான் இந்தச் சம்பவம் நடந்துச்சு. எங்களை நெருப்பு சூழறதுக்கு கொஞ்ச முன்னாடி வரை மலைகள், மரங்கள் என ரசிச்சுக்கிட்டே நடந்துட்டிருந்தோம். நாங்க ட்ரெக்கிங் போன வழியில்  ஒத்தடி மரம்னு ஒரு பெரிய மரம் இருக்கு. அதன் நிழலில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சப்போதான் ரொம்ப தூரத்தில் புகை தெரிஞ்சது. கிராமத்தில் எதையோ கொளுத்தறதா நினைச்சோம். ஆனால், சில நிமிஷங்களிலேயே அந்தப் புகை கொஞ்சம் கொஞ்சமா கறுப்பா மாறிட்டிருந்துச்சு. என் முகத்தில் நெருப்பின் அனல் உறைக்க ஆரம்பிச்சது. என்ன நடக்குதுன்னு புத்திக்கு புரியறதுக்குள்ளே, கால் வழியா கருப்பு நிற புகை சரசரன்னு ஏற ஆரம்பிச்சது. மூச்சும் திணற ஆரம்பிச்சது. எங்க ஆர்கனைசர், 'எல்லோரும் ஓடுங்க ஓடுங்க'னு கத்தறார். அப்படி அவர் கத்தினபோது, மணி இரண்டரை. அவ்வளவுதான் எனக்குத் தெளிவா ஞாபகமிருக்கு'' என்கிறார். 

குரங்கணி

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தபோது, குரலில் நடுக்கம் பரவ ஆரம்பித்திருந்தது. ''ஓடுங்கன்னு குரல் வந்ததுமே சாப்பாட்டை வீசிட்டு பாறை மேல தாவி ஓட ஆரம்பிச்சுட்டேன். திரும்பிப் பார்த்தா எனக்குப் பின்னாடி மூணு பேர் ஓடிவந்தாங்க. நாங்க ஓடின பக்கம் மலை ரொம்ப செங்குத்தா இருந்துச்சு. அந்தப் பக்கம் பாதையும் கிடையாது. ஆனாலும், உயிரைக் காப்பாத்திக்க ஒடினோம். அப்போ, எப்படி வந்ததுன்னே தெரியாமல் திடீர்னு நடுவில் நெருப்பு வந்துடுச்சு. ஜஸ்ட் ஒரு அடி கேப்ல அந்த நெருப்பை நான் பார்த்தேங்க. அதனால, என்னோடு ஓடி வந்தவங்க கொஞ்ச பேர் அப்படியே திரும்பி வேற பக்கம் ஓட ஆரம்பிச்சாங்க. அந்தச் செங்குத்தான மலையில் எப்படி ஏறினேன்னு தெரியலை. மேலே ஏறினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, ஈரோட்டிலிருந்து ட்ரெக்கிங்குக்கு வந்திருந்த அஞ்சு பேர், மலையின் அந்தப் பக்கம் சறுக்கி சறுக்கி இறங்கிட்டு இருந்தாங்க. நானும் அவங்களையே மாதிரியே சறுக்கிட்டே இறங்க ஆரம்பிச்சேன். என்னைப் பார்த்துட்டு என் பின்னாடி ரெண்டு பேர் சறுக்க ஆரம்பிச்சாங்க. ஆனால, நாங்க இறங்கின பக்கம் காற்று பலமா அடிச்சதால, நெருப்பு வேகமா வர ஆரம்பிச்சதை அப்புறம்தான் கவனிச்சோம். மை காட்... பயத்துல பாறையில் சறுக்கி, உடம்பெல்லாம் முள்ளு குத்தி, என்னோடு வந்த சிலருக்கு பேன்ட்டெல்லாம் கிழிஞ்சு, உயிர் தப்பிக்க நெருப்புக்கு எதிர் திசையில் ஓடிக்கிட்டிருந்தோம். எவ்ளோ நேரம் அப்படி ஓடினோம்னு தெரியலை.  யாரோ எங்களைச் சத்தமா கூப்பிடும் சத்தம் கேட்டுச்சு. யாரோ நம்மை மாதிரி உயிர் தப்பிச்சு ஓடி வர்றாங்க போலிருக்குன்னு திரும்பிப் பார்த்தோம். தேங் காட், வந்தது ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆளுங்களும் ஊர்மக்களும். போதுங்க, இப்பவும் என் காதுக்குள்ளே நெருப்பு எரியும் சத்தம் கேட்டுட்டே இருக்கு. இதெல்லாம் எனக்கு எப்போ மறக்குமோ தெரியலை''  - விலகாத பயக் குரலுடன் பேச்சை முடித்தார் சஹானா.


டிரெண்டிங் @ விகடன்