பா.ஜ.க மாவட்டத் தலைவர் வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு! - கோவையில் பரபரப்பு

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பி.ஜே.பி நந்தகுமார் வீடு

பா.ஜ.க-வின் கோவை மாவட்டத் தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டில், மர்ம நபர்களால் பெட்ரோல்குண்டு வீசப்பட்டுள்ள  சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று  இரவு சுமார் 3 மணி அளவில், கோவை பீளமேட்டில்  உள்ள பா.ஜ.க மாவட்டத் தலைவர் நந்தகுமார் வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசியுள்ளனர். இதில், அவருடைய காரின் முன்பகுதி எரிந்து நாசமடைந்திருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு  வந்த ஏ.சி., சுரேஷ்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட போலீஸார், பெட்ரோல்குண்டு வீச்சு தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்துவருகிறார்கள்.

பா.ஜ.க-வின் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழலுக்கு இடையில்,  பெட்ரோல்குண்டு வீசும் சி.சி.டி.வி காட்சியும் வெளியாகியிருக்கிறது. அதில், இருசக்கர வாகனத்தில்  ஹெல்மெட் அணிந்த தலையோடு  வரும் இருவர்,  பெட்ரோல் குண்டு வீசுவதும், அது வெடிக்காமல்  கீழே விழுந்ததும், இன்னொரு பாட்டிலில் இருக்கும் பெட்ரோலை ஊற்றி பற்றவைக்கும் காட்சியும் அதில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோ காட்சியைவைத்து, போலீஸ் விசாரணையை முடுக்கியுள்ளது.

புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. அதனால், தந்தை  பெரியார் திராவிடக் கழகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ஈ.வெ.ரா சிலை தமிழகத்தில் தகர்க்கப்படும் என்று  ஹெச். ராஜா பேசியதற்காக, கடந்த வாரம்  கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த வழக்கில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  நந்தகுமார் வீட்டில் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட அதே வேளையில், கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த உமாபதி என்ற ஃபைனான்ஸியர் வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசியுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!