வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (21/03/2018)

கடைசி தொடர்பு:09:59 (21/03/2018)

ரத யாத்திரைக்கு எதிராகப் போராட்டம்! - மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுமதியின்றி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டாலின்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்களைக் கடந்து வந்த இந்த ரத யாத்திரை, தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ரத யாத்திரை போராட்டம்

மேலும், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் குதித்தனர். இதனால், ஸ்டாலின் உட்பட தி.மு.க உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், மு.க ஸ்டாலின் உட்பட 75 தி.மு.க உறுப்பினர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச்செயலகம் அருகே நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காகவும் இவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.