சலூன் கடையில் நூலகம்! - வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படவைக்கும் பட்டதாரி

அந்தக் கடையில் முடி வெட்டிக்கொள்ளவோ, ஷேவ் செய்துகொள்ளவோ புதிதாக நுழைகிற யாரும், இது சலூன் கடைதானா இல்லை, நூலகமா என்று ஒருகணம் திகைத்துப்போகிறார்கள். காரணம், தனது சலூன் கடையை சிறு நூலகமாக மாற்றி வைத்திருக்கிறார் அதன் உரிமையாளர்.


சலூன்


புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடியில், 'இந்தியன்' என்ற பெயரில் சலுான் கடை வைத்துள்ளார், கணேசன். இவருக்கு வயது 50. தோற்றத்தில் படுசுத்தமாக 'பளிச்'என்று இருக்கிறார். பொதுவாக சலூன் கடைகளில், டி.வி, ஹேர்கட்டிங் மாடல் படங்கள்தான்  இருக்கும். ஆனால், கணேசனின்  கடையில்  விதவிதமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எல்லாமே பெரும் இலக்கிய ஆளுமைகள் எழுதிய புத்தகங்கள். இதுதவிர, கார்ல் மாக்ஸ்,லெனின், சேகுவேரா, உள்ளிட்ட உலகத் தலைவர்களின் நூல்களும்  திருக்குறள், திருவாசகம், மு.மேத்தா, வைரமுத்து,  அப்துல் கலாம், கருணாநிதி, கண்ணதாசன் உட்பட, பலர் எழுதிய  புத்தகங்கள்  வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, புத்தகங்களை வைக்க இடமில்லாமல், அட்டைப் பெட்டிகளிலும் அடுக்கி வைத்துள்ளார். மற்றும் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, இலவசமாக எடுத்துச்சென்று படிக்கின்றனர். மணமேல்குடியில், கணேசனை எல்லோரும் கவிஞர் என்றும் இவரது கடையை 'சலுான் லைப்ரரி' என்றும் குறிப்பிடுகிறார்கள்.


சலூன்
 

கணேசனிடம் நாம் பேசினோம். "சிறு வயதில் எனக்கு  தமிழாசிரியராக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. நான்  எட்டாவது படிக்கும் போது என் அப்பா  இறந்துவிட்டார். அதனால், அவர் நடத்திவந்த சலுான் கடையை, குடும்ப வருமானத்துக்காக  நான் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.  அதனால், பள்ளிப் படிப்பை  பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனாலும், படிக்கிற ஆசை மட்டும் எனக்குள்ளே இருந்துகொண்டே இருந்தது. படிக்கிற ஆசையில், எல்லாவிதமான புத்தகங்களையும் விலைகொடுத்து வாங்கி, அன்று முதல் இன்று வரை படித்துவருகிறேன். படிக்கப் படிக்க எழுத்தும் வசப்பட்டது. ஒருகட்டத்துக்குப் பிறகு, கல்வித் தகுதி அவசியம் என்று தோன்றியது. திறந்தவெளிப் பல்கலையில் எம்.ஏ., வரலாறு, அண்ணாமலைப் பல்கலையில் பி.லிட்., அஞ்சல் வழிக் கல்வியில் அடிப்படை இந்தியும் படித்துள்ளேன். தற்போது, முனைவர் பட்டத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.

சலூன்

இப்போது, திறந்தவெளி பல்கலை மாணவர்களுக்கு யோகா பேராசிரியராகவும் இருக்கிறேன். பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும்  புத்தக வாசிப்பு ஆர்வத்தையும் பழக்கத்தையும்  உருவாக்க வேண்டும்  என்ற நோக்கத்துடன் எனது கடையை ஒரு நூலகமாக  அமைத்து வைத்திருக்கிறேன்" என்றார் கணேசன். இவர், மணமேல்குடியின்' தமுஎசக-வின் கிளைத் தலைவராக இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!