சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்கள்! பதறிய ரயில்வே ஊழியர்கள்

துப்பாக்கி

Representational Image

 டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏ.சி வகுப்பு பெட்டியில் 6 தோட்டாக்கள்   கிடந்தன. இதுதொடர்பாக, ரயில்வே போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 6.45 மணியளவில் ஜி.டி எக்ஸ்பிரஸ் வந்தது. பயணிகள் இறங்கிய பிறகு, ரயில் பெட்டிகளைச் சுத்தம்செய்வதற்காக, பேசின்பாலம் அருகில் உள்ள பிட்லைனுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் கொண்டுசெல்லப்பட்டது. ரயில் பெட்டிகளை ஊழியர்கள் சுத்தம்செய்தபோது, ஏ.சி வகுப்பு பெட்டியில் 6 துப்பாக்கித் தோட்டாக்கள் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் அங்கு விரைந்து வந்து தோட்டாக்களைக் கைப்பற்றினர். விசாரணையைத் தொடங்கியுள்ள போலீஸார், முதற்கட்டமாக அந்தப் பெட்டியில் பயணித்த பயணிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, செல்போன் நம்பர்மூலம் விசாரணை நடந்துவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஜி.டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி பெட்டியில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்கள், 9 எம்எம் ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தக்கூடியவை. ரயிலில் யார் அதைக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. மேலும்,  லைசென்ஸ் பெற்றதா என்றும் விசாரித்துவருகிறோம். இதற்காக, ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். குறிப்பாக, துப்பாக்கித் தோட்டாக்கள் கிடந்த பெட்டியில் பயணித்தவர்களிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்" என்றனர்.  ரயில் பெட்டியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!