பெரியார் உருவ டி-ஷர்ட்டுடன் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி! | Thamimun ansari wears T-shirt with Periyar photo

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (21/03/2018)

கடைசி தொடர்பு:13:23 (21/03/2018)

பெரியார் உருவ டி-ஷர்ட்டுடன் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி!

தமிமுன் அன்சாரி

சட்டப்பேரவையில் நேற்று  தனி ஒருவராக இருந்து ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபாநாயகர் முன்பு கொந்தளித்த மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ இன்று பெரியார் படம் போட்ட டி-ஷர்ட்டுடன் பேரவைக்கு வந்து அதிரவைத்தார்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நேற்று கேரளா வழியாக தமிழக எல்லையான செங்கோட்டை வந்தடைந்தது. இதற்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. சட்டப்பேரவை கூட்டம் நடந்துவரும் வேளையில் ரத யாத்திரை தமிழகத்துக்கு வந்ததால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்-ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர். சட்டப்பேரவையில் கூச்சல் ஏற்பட்ட நிலையில் திடீரெனத் தனது இருக்கையில் இருந்து எழுந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி இரண்டு கைகளையும் உயர்த்தி ரத யாத்திரைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டதோடு, சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடுபட்டார். இதனால் சட்டப்பேரவை கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. பின்னர் அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தப் பிரச்னை ஓய்ந்துள்ள நிலையில் பெரியார் சிலை உடைப்பு சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. பேரவையை நேற்று அதிரவைத்த தமிமுன் அன்சாரி இன்று பெரியார் படம் போட்ட டி-ஷர்ட்டுடன் வந்தார். அவரைப் புகைப்படக்காரர்களும் வீடியோகிராபர்களும் சுற்றிவளைத்துப் படம் எடுத்தனர். அப்போது, பெரியார் சிலையை உடைப்புக்கு எதிராக கோஷமிட்டார். பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கச் சென்றார்.