சென்னையில் ஓடும் ரயிலிருந்து துண்டிக்கப்பட்ட பெட்டிகள்! - அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் 

ரயில் விபத்து

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் வேகமாகச் சென்ற மின்சார ரயிலிருந்து இரண்டு பெட்டிகள் திடீரெனத் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
 
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு 12 பெட்டிகளுடன் இன்று முற்பகலில் மின்சார ரயில் சென்றது. இந்த ரயில் ஊரப்பாக்கம் அருகே சென்றபோது கடைசி இரண்டு ரயில் பெட்டிகளின் வேகம் குறைந்தது. அந்தப் பெட்டிகளிலிருந்த பயணிகளில் சிலர் வாசல் வழியாக பார்த்தனர். அப்போது, தாங்கள் வந்த ரயில், முன்னால் சென்றுகொண்டிருந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டிரைவர் இல்லாமல் ரயில் பெட்டிகள் செல்வதையறிந்த பயணிகள் 'காப்பாற்றுங்கள்' என்று அலறத் தொடங்கினர். இந்தத் தகவல், ரயில் டிரைவருக்குத் தெரியவந்ததும் உடனடியாக அவர் ரயிலை நடுவழியில் நிறுத்தினர். அப்போது, இரண்டு ரயில் பெட்டிகள் மட்டும் சிறிது தூரம் ஓடி நின்றது. 


இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். அப்போது, மின்சார ரயிலில் பெட்டிகளை இணைக்கும் 'கப்ளீங்' உடைந்திருப்பது தெரியவந்தது. அதைத் தற்காலிகமாக சரிசெய்த ஊழியர்கள், மெதுவாக ரயிலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்துக்கு கொண்டுசென்றனர். நடுவழியில் மின்சார ரயில் நின்றதால், அந்த மார்க்கத்தில் ஒருமணி நேரத்துக்கு மேல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரிக்கு ரயில் வந்ததும் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். மின்சார ரயில் செல்லும் தண்டவாளத்திலிருந்தும் அந்த ரயில் வேறு தண்டவாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த மார்க்கத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. விபத்தில் சிக்கிய ரயிலிருந்த பயணிகள் அடுத்து வந்த மின்சார ரயிலில் ஏறிப் பயணித்தனர். 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரித்து வருகின்றனர். நடுவழியில் இரண்டு ரயில் பெட்டிகள் மட்டும் தனித்துவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!