ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தைக் குறிவைத்த லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கும் அதிகாரிகள்

"ஆவடி பத்திரப்பதிவு அதிகாரிகள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தெரிவித்தார்.

பத்திரப்பதிவு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் கஜபதி மற்றும் உதயசங்கர் தலைமையில் பத்துப் பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 85,535 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில கம்ப்யூட்டர் இணையதள பொருள்களையும் எடுத்துச் சென்றனர். சுமார் எட்டுமணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பற்றிய பல ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திரட்டிச் சென்றுள்ளனர். 

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பதிவாளர் முத்துகுமார் துணைப் பதிவாளர் மீனாட்சி ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் புரோக்கர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்த தகவல்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கஜபதி, ''முறையான விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!