செப்டம்பர் 22ல் ஜெ.வுக்கு கார்டனில் என்ன நடந்தது?- ஆணையத்தில் சசிகலா புதிய வாக்குமூலம்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் நேரில் பார்த்ததாக ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனுக்கு சசிகலா எழுத்து மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சசிகலா, ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனுக்கு சசிகலா அளித்துள்ள வாக்குமூலத்தில், ''செப்டம்பர் 22- ம் தேதி ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டுமென நான் வலியுறுத்தினேன். அவரோ, மருத்துவமனை வர மறுத்தார். பின்னர், பாத்ரூமுக்குப் பல் துலக்கச் சென்றார். திடீரென்று , சசி என்று குரல் எழுப்பினார். நான் உள்ளே ஓடிச் சென்றேன். அங்கே தரையில் மயங்கிக் கிடந்தார்.   உடனடியாக, அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். வழியில் முழித்துப் பார்த்த ஜெயலிலதா, `என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்' என்று என்னிடம் கேட்டார்'' எனத் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 3 மாதங்களாக தங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தம்பிதுரை எம்.பியும் கூறியுள்ள நிலையில், சசிகலா இரு தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரின் அனுமதியோடு  வீடியோக்களை நான் எடுத்தேன். அந்த 4  வீடியோக்களும் விசாரணைக் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் சசிகலா கூறியிருக்கிறார்.   

2016- ம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையிலேயே இருந்தது. செப்டம்பர் 27-ம் தேதி காவிரி நீர் பங்கீட்டு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அப்போதையை தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசுவாமி, அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் தனிச் செயலாளர்கள் ஏ.ராமலிங்கம், கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, அவரிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றனர்'' என்று சசிகலா அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!