`வீணாகும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர்'- கலெக்டரின் அலட்சியத்தால் கொந்தளிக்கும் விவசாயிகள் | Ariyalur Farmers give complaint to collector

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/03/2018)

கடைசி தொடர்பு:16:20 (21/03/2018)

`வீணாகும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர்'- கலெக்டரின் அலட்சியத்தால் கொந்தளிக்கும் விவசாயிகள்

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கொண்டு செல்லும் தண்ணீர் 3 மாதங்களாக வீணாகிறது என்று அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம்  புகார் கொடுத்துவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் எங்களை உதாசீனப்படுத்தினால் பின்விளைவுகளை கடுமையாகச் சந்திக்க வேண்டியிருக்கும்'' என்று மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள் கிராம மக்கள்.

குடிநீர் - விவசாயிகள்

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பிரச்னையால் மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது; அடையுங்கள் என்று விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குமுறுகிறார் முருகன் என்ற விவசாயி. ''அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ராட்சத போர்வெல்கள் அமைக்கப்பட்டு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குத் தினந்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

குடிநீர்

இதற்காக கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பைப்புகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பைப்புகளை முறையாகப் பராமரிக்காத காரணத்தால் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகில் உள்ள வயல்களில் தேங்கி உள்ளன. திருமழபாடியில் உள்ள பாளையப்பாடி மற்றும் கீழகாவட்டாங்குறிச்சி கிராமங்களுக்கு இடையில் செல்லும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாகக் குடிநீர் வீணாகி வருகிறது. வீணாகும் இந்தத் தண்ணீரை கொண்டு மக்கள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடைக்குத் தயார் நிலையிலும் உள்ளது.

குடிநீர்

இந்தத் தண்ணீரை அடைத்தால் மட்டுமே சாகுபடி செய்துள்ள நெல்லை அறுவடை செய்யமுடியும். இந்நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகிறது. இதற்கு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். மீண்டும் எங்களை உதாசீனப்படுத்தினால் பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்'' என்று எச்சரித்துள்ளார்.