பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து! - பதற்றமடைந்த பொதுமக்கள்

தீ விபத்து

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில், பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தும் உப்பு பொட்டலங்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களாகச் செயல்பட்டு வரும் இக்கடையில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் எதிர்பாரா விதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில் பயங்கர வெடிச் சத்தத்துடன் பற்றத் தொடங்கிய தீ, பின்னர் கொளுந்துவிட்டு எரிந்து கடை முழுவதும் பற்றியது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைக்குள் பொட்டாசியம் நைட்ரைடு மற்றும் பேரியம் நைட்ரைடு ஆகியவை இருந்ததாகவும், 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்தின் மூலம் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநகரின் மிக முக்கியப் பகுதியில் பயங்கரச் சத்தத்துடன் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!