வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (21/03/2018)

கடைசி தொடர்பு:16:55 (21/03/2018)

தமிழகத்தில் வனப் பரப்பு அதிகரித்திருக்கிறது! உலக வனநாள் கூட்டத்தில் தகவல்

உலக வனநாள்

மிழகத்தின் வனப் பரப்பளவு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு அரசு ரப்பர் கழக இயக்குநர் ராஜேஷ்குமார் டோக்ரா தெரிவித்தார்.

உலக வனநாளை முன்னிட்டு வனங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வு பேரணி கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் முதல் வடசேரி வனத்துறை அலுவலகம் வரை நடந்தது. கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணியை  குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார். எஸ்.பி. ஸ்ரீநாத் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட வன அலுவலகத்தில் நடந்த உலக வனநாள் விழிப்பு உணர்வு கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழக இயக்குநர் ராஜேஷ்குமார் டோக்ரா பேசுகையில், ''நான் இமாச்சல பிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவன். தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். காடுகள் பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல நீர் சுழற்சியிலும் காடுகள்  முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் வனம் நிறைந்த மாவட்டத்தில் குமரி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 60 சதவிகிதம் பகுதிகள் வனத்தால் சூழப்பட்டுள்ளன. ஆனால், இந்த வனங்களுக்கு யாரும் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்குவதில்லை. இந்தியாவில் எட்டாயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப்பகுதிகள் உள்ளன. இது அண்மையில் நடந்த வனத்துறை ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 முதல் 20 ஆண்டுகளில் தமிழகத்தின் வனப் பரப்பளவு சிறிதளவு அதிகரித்திருக்கிறது. இதுவும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நாம் பெருமைகொள்ள வேண்டும்'' என்றார்.

 வனம்

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜித் விஸ்வநாதன் பேசுகையில், ''குமரி மாவட்டத்தில் உள்ள வனங்களை பற்றி நமக்குத் தெரிவதில்லை. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் நம் மாவட்டத்துக்கு வந்து வனங்களைப் பார்த்துச் செல்கின்றனர். ஆனால், நம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. வனங்களைப் பாதுகாப்பதற்கு வனத்துறையுடன் இணைந்து பணியாற்ற மாணவர்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும். இரண்டு நாள்களுக்கு முன் மாவட்ட தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீர் மற்றும் அணைகளில் நீர் குறைந்ததற்கு, அதற்கு முந்தைய நாள்களில் வனங்களை அழித்ததும் ஒரு காரணம். இப்போது இருக்கும் வனத்தை அழித்துவிடக் கூடாது. அதற்கு எல்லா மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரும் சந்ததியினர் இழந்த வனங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.