'யார் பெரியவர் என்று பார்த்துவிடுவோம்!'- சவால்விடும் தமிழிசை | Tamilisai challenges Dravidians

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (21/03/2018)

கடைசி தொடர்பு:17:12 (21/03/2018)

'யார் பெரியவர் என்று பார்த்துவிடுவோம்!'- சவால்விடும் தமிழிசை

தமிழிசை செளந்தரராஜன்

“இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். பெரியார் பிறந்தது பெரிதா ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்தது பெரிதா என்று எதிர்காலத்தில் தெரியும்” என்று கோவையில் ஆவேசமாகப் பேசியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

கோவை மாவட்ட பி.ஜே.பி தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தகுமார் வீட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்ட  தமிழிசை செளந்தரராஜன், “கடந்த 7ம் தேதி, கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். வீசியவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இப்படியான தாக்குதல்கள்  தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது. மாவட்டத் தலைவர் வீட்டிலேயே தாக்குதல் நடப்பது போலீஸின் அஜாக்கிரதையைக் காட்டுகிறது. இந்தச் சம்பவத்துக்கு இதுவரைக்கும்  ஒரு அரசியல்கட்சியில் இருந்துகூட கண்டனங்கள் வரவில்லை. பி.ஜே.பி  தாக்குதலுக்கு ஆளாவதற்காகவே இருக்கிற இயக்கமா? இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதுதான் பாஜகவினர் மீது நடத்தப்படுகின்ற கடைசித் தாக்குதலாக இருக்க வேண்டும்.  நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது. ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை. ரத யாத்திரை வரக்கூடாது என்று சொல்லி பிரச்னை செய்பவர்களால்தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. 

இந்துக்கள் அத்தனைபேரும்  சிந்தனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. ஏனெனில், உங்களது ராமரையும், சீதாவையும், அனுமனையும் தாங்கிக் கொண்டு  ஒரு  ரதம்கூட தமிழகத்திற்குள்  வரக் கூடாது என்று சொல்பவர்களுக்கு இந்துக்கள் எதற்காக ஓட்டுப் போடவேண்டும்?. உங்களுக்கு ஓட்டு மட்டும் வேண்டும் ரதம் வேண்டாமா.  கேட்டால், இது பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல,  ஆண்டாள் வளர்த்த தமிழ். இங்கு பெரியார் மட்டும்தான் பிறந்தாரா? ஆழ்வார்களும் நாயன்மார்களும் இங்கேதான் பிறந்தார்கள். பெரியார் பிறந்தது பெரிதா? இல்லை நாயன்மார்கள், ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்று வருங்காலத்தில் பார்ப்போம். வரும்  23-ம் தேதி, பி.ஜே.பியினர் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலை கண்டித்து கோவையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போகிறோம். அன்றைக்கு தமிழகமே குலுங்கும். இந்தியாவே திரும்பிப் பார்க்கும். இனிமேல் பி.ஜே.பியினரைத் தொடும் துணிச்சல் யாருக்கும் வரக் கூடாது'' என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க