வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (21/03/2018)

கடைசி தொடர்பு:18:51 (21/03/2018)

குரங்கணி விபத்து! - தேனியில் விசாரணையைத் தொடங்குகிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி

குரங்கணி

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது குரங்கணி. கடந்த 11ம் தேதி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ட்ரெக்கிங் சென்ற பலர் உயிரிழந்தனர். சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி விசாரணை ஆணையர் அதுல்யமிஸ்ரா ஐ.ஏ.எஸ் இன்று தேனி வருகிறார். இவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வருகை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது, ``இன்று இரவு தேனி வருபவருக்கு, மாவட்ட சுற்றுலா மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை குரங்கணி சென்று, விபத்தில் காயம்பட்டவர்களை மலையிலிருந்து கீழிறக்கிய குரங்கணி, முதுவாகுடி, டாப்ஸ்டேசன் பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் விசாரணை செய்யவிருக்கிறார். பின்னர், விபத்து நடந்த ஒத்தமரம் என்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வார் எனத் தெரிகிறது. வனத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் `108 ஆம்புலன்ஸ்’ ஊழியர்கள் எனக் குரங்கணி மீட்புப்பணியின் போது இருந்த அத்தனை பேரும் விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும், என்னென்ன திட்டம் உள்ளது என்பது குறித்து அவர் வருகைக்குப் பின்னரே தெரியவரும்’’ என்றனர்.

உள்ளூர் மக்கள் தங்களது தோட்டத்துக் குப்பைகளுக்கு தீ வைத்ததுதான் விபத்துக்குக் காரணம் என்றும், கொழுக்குமலை எஸ்டேட்டிற்குச் செல்லும் மின்கம்பிகளில் மரக்கிளை உரசியதால் ஏற்பட்ட தீப்பொறிதான் விபத்திற்கு காரணம் என்றும், சிகரெட், பீடி குடித்துவிட்டு போட்டுவிட்டார்கள், அதனால்தான் விபத்து ஏற்பட்டது என்றும் பல கோணங்களில் விபத்திற்கான காரணங்கள் உலா வருகின்றன. மேலும், எந்தவித அனுமதியும் இல்லாமல், சட்டவிரோதமாக டிரெக்கிங் செல்ல காரணமாக இருந்த வனத்துறை அதிகாரிகள் அனைவரும்  விசாரிக்கப்படுவார்களா? சட்ட விரோத டிரெக்கிங் விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் வரை தொடர்பு உள்ளது என்று சொல்லப்படும் சூழலில், அமைச்சர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவாரா? போன்ற எண்ணற்ற எதிர்பார்ப்புகள் விசாரணை ஆணையத்தின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை குரங்கணி விசாரணையை முடித்த பின்னர், நாளை மறுநாள் அதுல்யமிஸ்ரா அவர்கள்,  மதுரையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக குரங்கணி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.