வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (21/03/2018)

'மணல் குவாரியைத் தடுக்காவிட்டால் குடியேறும் போராட்டம்'- கலெக்டருக்கு எதிராகக் கொந்தளிக்கும் கிராம மக்கள்

`கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ``கலெக்டர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்'' என்று எச்சரித்துள்ளனர் கிராம மக்கள்.

                             மணல்குவாரி

 

ஆட்சியரிடம் புகார் கொடுத்த போஸ் என்பவர் பேசத்தொடங்கினார். ``அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் மேலராமநல்லூரிலிருந்து மதனத்தூர் புதிய பாலம் வரை மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. எங்கள் பகுதியில் தூத்தூர், குருவாடியைச் சேர்ந்த விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். எங்கள் பகுதியிலிருந்து நதியனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆண்டிமடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்துக் கிராமத்துக்கும் இந்தக் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கும்பகோணம், நாகை, வேதாரண்யம் ஆகிய பெருநகரங்களுக்கு இந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, இப்பகுதிகளில் மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயத்துக்கும், மக்களின் ஜீவாதாரப் பிரச்னையான கூட்டுக் குடிநீர்த் திட்டம் பெரிதும் பாதிக்கப்படும். கல்லணையிலிருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டுமெனப் பல வருடங்களாக கோரிக்கை வைத்துவருகிறோம். இன்றளவும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த 4 நாள்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில் அரசு மணல் குவாரி அமைக்க ஆயுத்த பணி தொடங்கப்பட்டது. எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சேர்ந்து போராட்டம் செய்ததால் அப்பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமான மணல் குவாரியை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் பகுதியே மணல் குவாரி என்ற பெயரில் பாதி கனிமவளத்தை சுரண்டிவிட்டார்கள். இன்னும் கொஞ்ச காலம் போனால் வாழவே தகுதியில்லாத கிராமமாக மாறிவிடும். எங்களுடைய மனக்குமுறல்கள் எல்லாவற்றையும் ஆட்சியரிடம் தெரிவித்துட்டு வந்திருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். ஆட்சியரே இது மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான போராட்டமாகப் பார்க்காமல் எங்களது வாழ்வாதாரமாகப் பாருங்கள்” என்று கூறினார்.