பரிகாரம் என்ற பெயரில் நடந்த பாலியல் வன்கொடுமை! - சேலத்தில் சிக்கிய ஜோதிடர்

 ஜோதிடர்

பெற்றோர்கள் கையில் விளக்கை கொடுத்து வெளியே நிற்க வைத்து விட்டு அவர்களின் பெண்ணுக்குப் பரிகார பூஜை செய்வதாகச் சொல்லி பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பன்னீர்செல்வம்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கே.ஆர். தோப்பூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 35). இவர் அப்பகுதியில் குமரன் குடில் என்ற சொகுசு வீட்டில் ஶ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரிடம் நாமக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தனது பெண்ணின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த ஜாதகத்தை பார்த்த பன்னீர்செல்வம் பெண்ணுக்கு தோஷம் இருக்கிறது; பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி பெற்றோரின் கையில் எரியும் மண்ணெண்ணெய் விளக்கை கொடுத்து அணையாமல் பார்த்துக் கொள்ளுபடிகூறி விட்டு அவர்களின் பெண்ணை அறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையடுத்து பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி அந்தப் பெண் அழுதுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோரே, ஜோதிடரை திட்டிவிட்டுச் சென்று விட்டார்கள்.

இந்தச் சம்பவம் சேலத்தை சேர்ந்த புரட்சிகர விடியல் பெண்கள் மையத்தை சேர்ந்தவர்களுக்கும், ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் தெரியவர அப்பகுதிக்குச் சென்று விசாரித்துப் பார்த்ததில் அந்த ஜோதிடர் பன்னீர்செல்வம் இதுபோல 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதையடுத்து நேற்று இரவு ஜோதிடர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!